ஜம்மு காஷ்மீர் – இந்தியாவுடன் ஒருங்கிணைந்த தினம்
26 அக்டோபர் 1947, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும். நம் பாரதத்தின் மணிமகுடமாக கருதப்படும் ஜம்மு – காஷ்மீர், நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப் பட்டதற்கான சாசனம் கையெழுத்திடப்பட்ட நாள் அது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் தலைமையின் கீழ், 500க்கும் மேற்பட்ட சிறு ராஜ்ஜியங்களாக இருந்த இந்தியா ஒரே நாடாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் இந்தியாவுடன் கடைசியாக சேர்க்கப்பட்ட பகுதி ஜம்பு – காஷ்மீர். ஆனால் அந்த முயற்சியில் இந்தியா முழு வெற்றி அடையவில்லை.
நமக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர், ஜம்மு – காஷ்மீர் பகுதியை கைவசப் படுத்துவதில் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவியது.
அப்போது ஜம்மு காஷ்மீரின் அரசராக இருந்த ஹரி சிங், தன் நாட்டை இந்தியாவிடம் ஒப்படைக்கவே விரும்பினார். அவருக்கு பாகிஸ்தான் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை.
ஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கும், ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சி தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே இருந்த நட்புறவு, ராஜா ஹரி சிங்குக்கு தயக்கத்தை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைத்தால், அதன் அதிகாரம் ஷேக் அப்துல்லாவிடம் ஒப்படைக்கப் படலாம் என்ற காரணத்தால், மன்னர் ஹரிசிங் முடிவெடுக்க முடியாமல் தயங்கினார்.
அதற்கிடையில், பாகிஸ்தானின் தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா, தனது உடல் நிலையை காரணம் காட்டி, ஜம்மு காஷ்மீரில் வந்து தங்க மூன்று முறை அரசரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் காஷ்மீர் வந்தால், தன் மனதை மாற்ற முயற்சிக்கலாம் என கருதிய மன்னர் ஹரிசிங், ஜின்னாவின் கோரிக்கையை ஏற்கவில்லை.
அதே சமயம் ஜம்மு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு, மன்னர் ஹரிசிங்கை சம்மதிக்க வைக்க இந்தியா தரப்பிலும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அதில் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர் குருஜி என அழைக்கப்பட்ட எம்.எஸ்.கோல்வல்கர், முக்கிய பங்கு வகித்தார்.
1947 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17ம் தேதி, ஸ்ரீநகர் சென்ற குருஜி, அக்டோபர் 18ம் தேதி மன்னர் ஹரிசிங்கை நேரில் சந்தித்து பேசினார். தாமதமின்றி ஜம்மு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி, மன்னரை வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து, காங்கிரஸ் ஆட்சியின் போது சோனியா காந்தியின் கீழ் முக்கிய அதிகாரியாக பணியாற்றிய அருண் பட்நாகர், தன் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். சர்தார் வல்லபாய் படேல் கேட்டுக் கொண்டதன் பேரில், குருஜி அவர்கள் மன்னர் ஹரிசிங்கை சந்தித்து பேசியதாக அருண் பட்நாகர் எழுதி உள்ளார்.
மேலும் அந்த சமயத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதியின் முழு நேர ஊழியராக (ப்ராந்த பிரச்சாரக்) இருந்த மாதவ்ராவ் பூலேவும் தன் புத்தகமான ‘ஸ்ரீ குருஜி சமக்ர தர்சன்’ இல், “குருஜி – மன்னர் ஹரிசிங் சந்திப்பு” பற்றி எழுதி உள்ளார்.
இந்த சூழ்நிலையில் மன்னர் ஹரிசிங்கின் தயக்கதால் பொறுமை இழந்த பாகிஸ்தான், 1947 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரை கைப்பற்ற லெஃப்டினெண்ட் ஜெனரல் அக்பர் கான் தலைமையில் தன் படைகளை அனுப்பியது.
ஜம்மு – காஷ்மீர் உள்ளே ஊடுருவிய பாகிஸ்தான் படைகள் பாரமுல்லா, பூன்ச், ராஜுரி, கோட்லி, பிம்பர் உள்ளிட்ட பல இடங்களை சூறையாடினர். இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் என ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்தனர். பெண்களை பலாத்காரம் செய்தனர். சூறையாடிய பொருட்களை நூற்றுக்கணக்கான லாரிகளில் பாகிஸ்தான் கொண்டு சென்றனர்.
பாகிஸ்தான் படையெடுப்பை தொடர்ந்து, தன் குடும்பத்துடன் டில்லியில் தஞ்சமடைந்த மன்னர் ஹரிசிங், தன் நாட்டை இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதித்தார். அதற்கான சாசனத்தில், அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி கையெத்திட்டார்.
அப்போது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், அந்த சாசனத்தை அதிகாரப் பூர்வமாக ஏற்பதற்கான அரசாணையில், 27 ஆம் தேதி கையெத்திட்டார். அதன் படி, அன்றில் இருந்தே ஜம்மு – காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது.
ஆனால், துரதிருஷ்டவசமாக இந்திய படைகள் விரைந்து சென்று, பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றிகரமாக விரட்டி அடித்தாலும், ஜம்மு காஷ்மீரை நம்மால் முழுமையாக மீட்க முடியவில்லை. அதில் ஒரு பாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழ் சென்று விட்டது. இன்று வரை அது பாகிஸ்தான் ஆக்கிமிப்பு காஷ்மீராகவே உள்ளது.
அதே சமயம் இந்தியாவுக்கு சொந்தமான ஜம்மு காஷ்மீரிலும் பிரச்சனை தீரவில்லை. அப்போதைய காங்கிரஸ் அரசு சட்டப்பிரிவு 370ஐ உருவாக்கி, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தது. அதன்படி ஜம்மு காஷ்மீருக்கு என தனிக் கொடி, தனி அரசாங்கம் பின்பற்றப்பட்டது. அதன் காரணமாக பாகிஸ்தான் பிரிவினைவாதிகளால், எப்போதும் அங்கு பதற்றம் நிலவியது.
இதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவு கட்டிய பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீருக்கு, யூனியன் பிரதேசம் என்ற அங்கீகாரத்தை வழங்கி, இந்தியாவின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தது. தற்போது அங்கு பல வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்றுடன் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஒவ்வொரு வருடமும், அக்டோபர் 26 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது மத்திய அரசின் முயற்சியாலும் இந்திய ராணுவத்தின் திறமையாலும், ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலை? காலம் தான் பதில் சொல்லும்.
நிரஞ்சனா