ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்!

Share it if you like it

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை தாக்கும் அளவுக்கு நிலைமை கைமீறிச் சென்றது. எனவே, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதன் பிறகு, இரு யூனியன் பிரதேசங்களிலும் ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. மேலும், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, மாநில போலீஸாருடன் இணைந்து பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் பயனாக, ஏராளமான பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு, நூற்றுக்கணக்கானோர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன் பிறகு, ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வந்தது. இதையடுத்து, காஷ்மீரிலிருந்து வெளியேறிய மற்றும் வெளியேற்றப்பட்ட ஹிந்து பண்டிட்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இந்த சூழலில், கடந்த ஓராண்டாக அம்மாநிலத்தில் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள், காஷ்மீர் பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில், காஷ்மீர் பண்டிட்கள் பலரும் உயிரிழந்த நிலையில், அங்கு அரசு பணிகளில் பணிபுரியும் பண்டிட் சமூகத்தினர், தங்களை வேறு இடங்களுக்கு மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பயங்கரவாதிகளை ஒடுக்கும் படலம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக துணை ராணுவப் படையினருடன் ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் மாநில போலீஸாரும் இன்று அதிகாலை அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சைனாபுரா நகரில் முன்ஜா மர்க் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டை சில மணி நேரம் நீடித்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த 3 பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், கொல்லப்பட்ட மூவரில் 2 பேர் குறித்த அடையாளம் தெரியவந்திருக்கிறது. ஒருவன் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த லத்தீப் லோன். இவன், காஷ்மீர் பண்டிட் புரானா கிருஷ்ண பட் என்பவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவன். மற்றொருவன் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த உமர் நசிர். இவன், நேபாள் நாட்டைச் சேர்ந்த தில் பகதூர் தபா என்பவரைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவன். 3-வது நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காஷ்மீர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களிடம் இருந்து ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், 2 கைத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.


Share it if you like it