ஜம்மு காஷ்மீர் மாநில டி.ஜி.பி. கொலையில், அவரது வீட்டு வேலையாள் யாஷிர் அகமது லோஹர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவன் யார்? எதற்காக டி.ஜி.பி.யை கொலை செய்தான் என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநில சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஹேமந்த் லோஹியா. ஜம்மு நகரிலுள்ள உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தார். 57 வயதான ஹேமந்த் குமார், 1992-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியாவார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநில சிறைத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு அவரது அறையில் திடீரென தீப்பிழம்புகள் எழுந்திருக்கிறது. இதைக்கண்ட பாதுகாப்பு போலீஸார் விரைந்து சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது, லோஹியாவின் அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்திருக்கிறது. உடனே, போலீஸார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், உடலில் தீக்காயங்களுடன் லோஹியா கிடந்திருக்கிறார்.
இதையடுத்து, லோஹியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால், அதற்குள் அவர் இறந்து போயிருந்தார். லோஹியாவின் சொந்த வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருவதால், குடும்பத்தினருடன் தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். இச்சம்பவம் நடந்தபோது அவரது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். இதனிடையே, ஹேமந்த் குமார் வீட்டில் பணியாற்றிய யாஷிர் அகமது லோஹர் தலைமறைவாகி விட்டான். ஆகவே, அவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில், யாஷிரை நேற்று போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவனுக்கு பயங்கரவாத அமைப்புகள் எதனுடனும் தொடர்பு இருக்கிறதா, எதற்காக டி.ஜி.பி.யை கொலை செய்தான் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், யாஷிர் கடந்த 6 மாதங்களாகத்தான் லோஹியாவின் வீட்டில் வேலை செய்து வந்திருக்கிறான். தொண்டு நிறுவனம் நடத்திவரும் லோஹியாவின் நண்பர் ஒருவர்தான், யாஷிரை வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறார். மேலும், கடந்த 2 வருடங்களுக்கு முன்புதான் தனது சொந்த கிராமத்தில் இருந்து யாஷிர் வெளியேறி இருக்கிறான். ஆகவே, லோஹியா வீட்டில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு கடந்த 18 மாதங்களாக யாஷிர் எங்கிருந்தான் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, யாஷிரிடமிருந்து ஒரு டைரியை போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த டைரியில், “அன்பான மரணமே என் வாழ்வில் வா.. என்னை மன்னித்துவிடு.. நான் மோசமான நாளை, வாரத்தை, மாதத்தை, வருடத்தை கொண்டுள்ளேன். என் வாழ்வில் அன்பு இல்லை.. 99 சதவிதம் சோகமே உள்ளது. 100 சதவீதம் போலியான புன்னகையுடன் நான் உலவுகிறேன்” என்று எழுதி இருக்கிறான்.