காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளால் நாங்கள் தோற்றுப் போய் விட்டோம். எங்களால் ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் தங்களது இயலாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பாகிஸ்தான் ஐ.நா. சபையில் எப்படியாவது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு வந்து, தங்களது நாட்டில் நிலவும் தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை திசைதிருப்ப முயன்று வருகிறது. ஆனால், இதற்கு இந்திய தரப்பிலிருந்து தக்க பதிலடி கொடுக்கப்படுவதால், பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது, பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் நசிந்து திவாலான நிலையில் இருக்கும்போதுகூட, காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவுக்கு எதிரான சர்வதேச அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில், சமீபத்தில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்திலும் இவ்விவகாரத்தை கிளப்பினார் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி. இவர், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன். சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி. தொலைக்காட்சியின் ஆவணப்படும் வெளியானபோது, இந்திய பிரதமர் மோடியை ‘குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர்’ என்று வர்ணித்தார். இது சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையானது. ஐ.நா.வில் இவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிலா காம்போஜ், பாகிஸ்தானின் இந்த விஷமத்தனம் பதில் சொல்வதற்குக் கூட லாயக்கற்றது என்று சொல்லி மூக்குடைத்தார்.
இந்த நிலையில், அமெரிக்கா சென்றிருக்கும் பிலாவல் பூட்டோ, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ‘காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் ஐ.நா. சபையில் எப்போது எழுப்ப முயன்றாலும், இந்தியா ராஜதந்திர சாதுர்யத்துடன் கடுமையான ஆட்சேபங்களை தெரிவித்து முறியடித்து வருகிறது. இது ஐ.நா.வில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரம் அல்ல என்றும், மற்ற நாடுகளுடன் தங்களுக்கு இருக்கும் தூதரக உறவைப் பயன்படுத்தி தடுத்து விடுகிறது. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் இந்தியாவிடம் தோல்வியடைந்து விட்டோம்’ என்று சொல்லி தங்களது நாட்டின் இயலாமையை வெளிப்படுத்தி இருக்கிறார் பிலாவல் பூட்டோ.