படிப்புக்கு இடையூறாக ஒலிபெருக்கிகள் இருந்ததாகக் கூறி மசூதி முன்பு ஹனுமன் சாலிசா பாடிய மாணவர்களை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஜம்மு காஷ்மீர் முனிசிபல் கார்ப்பரேஷனும் மே 17-ம் தேதி முதல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதையடுத்து, மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி, சில மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு அரசுக் கல்லூரி செயல்படும் இடத்துக்கு அருகே இருக்கும் மசூதியில் மட்டும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் மசூதி முன்பு ஹனிமன் சாலிசா பாடியிருக்கிறார்கள். அந்த மாணவர்களை போலீஸார் கைது செய்திருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்தாலப் பகுதியில் காந்தி நினைவு அரசுக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, உள்ளூர் மசூதியில் தொழுகை நடத்தப்பட்டு வந்திருக்கிறது. அப்போது, பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக இருந்திருக்கிறது. இதுகுறித்து மசூதி நிர்வாகத்திடம் தெரிவித்தும், ஒலிபெருக்கிகள் அகற்றப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், மசூதிக்கு முன்பு அமர்ந்து ஹனுமன் சாலிசா பாடியிருக்கிறார்கள். தகவலறிந்து வந்த போலீஸார், ஹனுமன் சாலிசா பாடிய மாணவர்களை கைது செய்தனர். இதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுக்கிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மாணவர்களை போலீஸார் விடுவித்திருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிகள் முன்பு ஹனுமன் சாலிசா இசைக்கப்படும் என்று, நவநிர்மான் சேனை கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே அறிவித்திருந்தார். அப்படி அகற்றப்படாத மசூதிகளுக்கு முன்பு அவர்களது ஆதரவாளர்கள் ஹினுமன் சாலிசாவை இசைத்தனர். இதைத் தொடர்ந்து, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதி வாங்குமாறு அம்மாநில அரசு அறிவித்தது. அதன்படி, மசூதி நிர்வாகங்கள் அனுமதி பெற்று வருகின்றன. இந்த சூழலில், ஜம்மு காஷ்மீரிலும் இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.