காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன்: அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு குறியா?!

காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன்: அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு குறியா?!

Share it if you like it

ஜம்மு காஷ்மீர் எல்லையில் வெடிகுண்டுகளுடன் பறந்து வந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்

ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் படையினரும், மாநில போலீஸாரும் பயங்கரவாத நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பயனாக, இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கும் பயங்கரவாதிகளுக்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் சப்ளை செய்வதற்காக, பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் மற்றும் வெடிபொருட்களை சுமந்து கொண்டு வரும் ஆளில்லா விமானங்கள் அவ்வப்போது சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற பல விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை எல்லை பாதுகாப்புப் படையினரும், மாநில போலீஸாரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹிராநகர் செக்டருக்கு உட்பட்ட கதுவா மாவட்டத்தின் தளி ஹரியா சக் கிராமத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒரு ஆளில்லா விமானம் பறந்து வருவதைக் கண்டனர். உடனடியாக, அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினர். பின்னர், அந்த ஆளில்லா விமானத்தஐ சோதனை செய்தபோது, 7 காந்த குண்டுகள் மற்றும் 7 யு.பி.ஜி.எல். கையெறி குண்டுகள் இருப்பதை போலீஸார் கண்டறிந்து, மீட்டு செயலிழக்கச் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, ராஜ்பாக் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் டீம் அப்பகுதிக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. தளி ஹரியா சக் பகுதி எப்போதும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கான பாதையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இது அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. காரணம், 2017-ம் ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலரும் காயமடைந்தனர். இதன் பிறகு, பலத்த சோதனைக்குப் பிறகே அமர்நாத் யாத்திரை நடந்து வந்தது.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டுதான் அமர்நாத் யாத்திரை தொடங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பயங்கரவாத செயல்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, ஹிந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஆகவே, இது அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆகவே, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையும் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது.


Share it if you like it