ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில், போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது 7 வயது மகள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போலீஸார் மீதும் ஹிந்து பண்டிட்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல, இம்மாத தொடக்கத்தில் தாசில்தார் அலுவலகத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஹிந்து பண்டிட் ஒருவர் கொல்லப்பட்டார். இவர், ஹிந்து பண்டிட்களின் மறுவாழ்வு நலத்திட்ட சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், தற்போது பயங்கரவாதிகளின் தாக்குதலில் மற்றொரு போலீஸ்காரர் உயிரிழந்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டம் சௌரா பகுதியைச் சேர்ந்தவர் சைஃபுல்லா காத்ரி. போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்த இவர், நேற்று மாலை தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்து தனது 7 வயது மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த பயங்கரவாதிகள், சைஃப்புல்லா காத்ரியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், சைஃப்புல்லா காத்ரி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரது 7 வயது மகள் படுகாயமடைந்தார். உடனடியாக, காத்ரியும், அவரது மகளும் ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்புப் படையினருடன் போலீஸாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் க்ரீரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். போலீஸார் ஒருவரும் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.