நுபுர் ஷர்மாவின் தலையை துண்டிப்பதுபோல வி.எஃப்.எக்ஸ். (VFX) வீடியோ வெளியிட்ட காஷ்மீரைச் சேர்ந்த யூடியூப்பர் ஃபைசல் வானி, மேற்கண்ட தனது ட்விட்டை நீக்கியதோடு, மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபைசல் வானி. முஸ்லிம்கள் மத்தியில் பிரபலமான யூடியூப்பர். சர்ச்சை வீடியோக்களை வெளியிடுவதில் கில்லாடி. இந்த சூழலில், ஒரு தனியார் டி.வி. சேனல் நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, இஸ்லாமிய மதப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் முகமது நபி பற்றிய ஒரு கருத்தைத் தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், இஸ்லாமிய நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, நுபுர் ஷர்மா, கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், காஷ்மீர் யூடியூப்பர் ஃபைசல் வானி, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மாவின் தலையை துண்டிப்பது போன்று ஒரு VFX வீடியோவை தயாரித்து, தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். இதனிடையே, இந்தியா முழுவதுமுள்ள முஸ்லிம்கள், நுபுர் ஷர்மாவை கண்டித்து நேற்று போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். இவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். சில இடங்களில் நடந்த வன்முறையில் போலீஸார் பலரும் கல்வீச்சில் காயமடைந்தனர்.
இந்த சூழலில்தான், தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்த நுபுர் ஷர்மாவின் தலையை துண்டிக்கும் வீடியோவை கொண்ட முந்தைய ட்வீட்டை நீக்கி இருக்கும் ஃபைசல் வானி, புதிதாக மன்னிப்புக் கேட்கும் வீடியோவை பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில், “நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் யாரேனும் புண்பட்டிருந்தால் நான் மிகவும் வருந்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, வன்முறை தொடர்பாக பதிலளித்திருக்கும் இஸ்லாமிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், “முகம்மது நபி இன்று உயிருடன் இருந்திருந்தால், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் வெறியர்களின் பைத்தியக்காரத்தனத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்திருப்பார்” என்று கூறியிருக்கிறார். மற்றொரு ட்வீட்டில், “பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் கோரங்கி பகுதியிலுள்ள ஸ்ரீமாரி மாதா மந்திரில் உள்ள சிலைகள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பாகிஸ்தானில் மட்டுமின்றி வங்கதேசத்திலும் சகிப்புத்தன்மை இன்மை அதிகரித்து வருகிறது. முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களையும் மனிதர்களாக மதிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.