பிரதமர் மோடியின் கனவுகள், கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்தேன் என்று காங்கிரஸிலிருந்து விலகிய தொழிலதிபர் நவீன் ஜிண்டால் தெரிவித்தார்.
பாஜக சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ள மக்களவை வேட்பாளர் பட்டியலில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை குருஷேத்ரா தொகுதியில், அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
பாஜகவில் சேர்ந்தது குறித்து நவீன் ஜிண்டால் நேற்று கூறியதாவது: இது எனது அரசியல் வாழ்க்கையின் 2-வது இன்னிங்ஸ் ஆகும். இன்று எனது வாழ்வில் ஒரு பொன்னாள். 10 ஆண்டுகள் காங்கிரஸ் சார்பில் நான் எம்.பி.யாக இருந்தபோது மக்களவையில் மக்களின் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பிப் பேசினேன்.
எதிர்மறையாகப் பேசும், எதிர்மறை மக்கள் (காங்கிரஸ்) குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. காங்கிரஸின் இன்றைய நிலை எதிர்மறையாகத்தான் உள்ளது.
நான் நேர்மறை அரசியல் மீது நம்பிக்கை கொண்டவன். பிரதமர் மோடியின் கொள்கைகள், கனவுகளால் ஈர்க்கப்பட்டு தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளேன். 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கனவு கண்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார். அவரது கனவுகளை நனவாக்க நான் விரும்புகிறேன்.
தற்போது குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுத்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குருஷேத்ரா தொகுதி மக்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். குருஷேத்ராவில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததும் பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டார், ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோரிடம் ஆசி பெற்றேன். இவ்வாறு நவீன் ஜிண்டால் கூறினார்.