காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியா, ஜோதிமணியா? நெட்டிசன்கள் கேள்வி!

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியா, ஜோதிமணியா? நெட்டிசன்கள் கேள்வி!

Share it if you like it

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்புத் தெரிவித்திருக்கும் நிலையில், கரூர் எம்.பி. ஜோதிமணி எதிர்ப்புத் தெரிவித்திருப்பதால், கட்சித் தலைவர் யார் என்று நெட்டிசன்களும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இடு ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, 50 சதவிகிதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, நமது நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 49.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் 69 சதவிகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், 50 சதவிகித இட ஒதுக்கீட்டுடன், கூடுதலாக பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இது ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலில் இருந்து வருகிறது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தி.மு.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடந்து வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி லலித் மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்தனர். அதேசமயம், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்று தீர்ப்பளித்தனர். பெரும்பான்மையான நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்ததால், 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், மேற்படி தீர்ப்பை வரவேற்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். அதாவது, 2005 – 06-ம் ஆண்டு காலகட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட, சின்ஹா கமிஷன் கொடுத்த அறிக்கை 2014-ம் ஆண்டு மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அடிப்படையில்தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் இத்தீர்ப்பை வரவேற்றிருக்கிறார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால், அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

இந்தியாவில் 5,000 ஆண்டுகளாக சமூகநீதி என்பது இல்லை. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு, அந்த நடைமுறையை ஜவஹர்லால் நேரு உடைத்தெறிந்து நாடாளுமன்றத்தில் முதன் முறையாக அரசியல் சட்டத்தை திருத்தி இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார்கள். எனவே, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், 5,000 ஆண்டுகாலமாக சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை. இப்பொழுது எங்களுக்கும் வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய, எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவிகித இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதி எம்.பி.யான ஜோதிமணி, 10 சதவிகித இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஜோதிமணி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு நூற்றாண்டுகால சமூக நீதி போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இட ஒதுக்கீடு சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, சமவாய்ப்புகளை உருவாக்கவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. சமூக ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைப்பது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்வது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோதிமணியின் இப்பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் அமெரிக்கை நாராயணன், இந்திய தேசிய காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக ஜோதிமணி பேசுவது யாருக்காக? இந்த இரட்டை வேடம் யாருக்காக? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும்போது, ஜோதிமணி எதிர்ப்பது ஏன்? காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியா அல்லது ஜோதிமணியா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it