பா.ஜ.க.வின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தி.மு.க.வை வெளுத்து வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.வின் தேசிய தலைவராக இருப்பவர் ஜே.பி.நட்டா. இவர், நேற்றைய தினம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.செல்வகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டர்.
இதையடுத்து, பா.ஜ.க. தேசிய தலைவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ; தமிழகத்துக்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசிடமிருந்து ஏராளமான திட்டங்கள் வருகின்றன. நம் நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது. ஆனால், தமிழகம் பாதுகாப்பான கரங்களில் இல்லை. எனவே, அந்த கரத்தை மாற்றுவதே நல்லது.
தி.மு.க. என்பது மாநில கட்சி அல்ல. அது ஒரு குடும்ப கட்சி. வாரிசு கட்சி. மாநிலத்துக்கு ஏற்றதை செய்யும் கொள்கையுடன் அந்த கட்சி இல்லை. குடும்பத்துக்கு தேவையானதை செய்யவே உள்ளது. நாங்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். தி.மு.க. குடும்ப நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாங்கள் அனைவரையும் ஒன்றிணைக்க இருக்கிறோம். அவர்கள் பிரிக்க இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல், அதைத்தொடர்ந்து நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என கூறியிருந்தார்.