பேரரசர் – ஸ்டாலின் சிற்றரசர் – உதயநிதி என அமைச்சர் கே.என்.நேரு தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இது, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தினர் தங்களது கட்சி ஐனநாயக கட்சி என்று மேடைதோறும் பேசி வருகின்றனர். எனினும், அங்கு நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது அது ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது என்பதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதனை மெய்ப்பிக்கும் வகையில், கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் மாநகர தி.மு.க.வின் சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டம், கடலூர் புதுப்பாளையம் கடை வீதியில் நடைபெற்றது. இதில், மாநகர செயலாளர் கே.எஸ். ராஜா தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டர்.
இக்கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. ராஜன் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் ; கருணாநிதிக்கு பிறகு, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவரது, மகன் உதயநிதி தற்போது அமைச்சராகி உள்ளார். விரைவில், அவர் துணை முதல்வராக பொறுப்பு ஏற்பார். இன்னும், எத்தனை ஆண்டு காலம் நான் உயிரோடு இருப்பேன் என்பது எனக்கு தெரியாது. எனக்கு, ஒரே ஆசை இன்பநிதி ஐயாவையும் தமிழக முதல்வராக நான் பார்த்து விட வேண்டும் என உருக்கமாக பேசியிருந்தார். இது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் கே.என். நேரு. இவர், தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பேரரசர் போல ஸ்டாலின், சிற்றரசர் போல உதயநிதி இருப்பதாக கூறியுள்ளார். இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி தமிழகம், எந்த திசையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதற்கு கே.என்.நேருவின் பேச்சு மற்றும் கழக கொத்தடிமைகளின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.