ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு கே.எஸ். அழகிரி கிடுக்குபிடியான கேள்வி எழுப்பி இருப்பதை இஸ்லாமியர்கள் வரவேற்றுள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி காங்கிரஸ். தமிழகத்தில், அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை கொண்டு இருக்கும் மூன்றாவது பெரிய கட்சி. அந்த வகையில், ஆளும் கட்சியிடம் மிக நெருக்கமான உறவை கொண்டுள்ளது. தமிழகத்தில், விடியல் ஆட்சி அமைந்த பின்பு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இருந்து வருகிறது. இந்த, ஆட்சியில் நிகழும் அவலங்களை பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஸ்டாலின் அரசின் மீது மென்மையான கண்டனங்களை மட்டுமே முன்வைத்து வருகிறது.
விடியல் ஆட்சியில், நிகழும் அவலங்களை கண்டிக்காமல் காங்கிரஸ் இருப்பது அக்கட்சியின் எதிர்காலத்திற்கே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி விடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் ;
எத்தனையோ தமிழர்கள், இஸ்லாமியர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை ஏன்? விடுவிக்கவில்லை? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் அனைத்து விவகாரங்களுக்கும் அழுத்தம் கொடுக்க முடியாது. காங்கிரஸூக்கும் தி.முக.வுக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. மதச்சார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில் இணைந்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இவரின், கருத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், இஸ்லாமியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொடுத்து இருந்தார். இந்த ஆட்சி அமைந்து 16 மாதங்களை கடந்து விட்டது. இருப்பினும், அவர்களது கோரிக்கை இன்று வரை முழுமையாக நிறைவேற்றபடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தான், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை தமிழக அரசு ஏன்? விடுவிக்கவில்லை என்ற கிடுக்குப்பிடியான கேள்வியினை ஸ்டாலினுக்கு அவர் முன்வைத்துள்ளார்.