தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி போராட்டம் நடத்தவிருப்பதாக காணொளி ஒன்றினை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராகுல் காந்தியின் காமெடிகளை பார்த்து அக்கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் காங்கிரஸை விட்டே ஓட்டம் பிடித்து வருகின்றனர். இது ஒருபுறம் என்றால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தில் இருந்து வருகிறது. அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் விவசாய அணி மாநில செயலாளருமான ஆர். எஸ். ராஜன். கே.எஸ். அழகிரிக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நளினியை விடுவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த சிக்கலும் கிடையாது. மேலும், அவரை விடுவிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி கூறியிருக்கிறார். இது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மீது பக்தி கொண்டவர்களின் உள்ளத்தில் ஈட்டியை பாய்ச்சுவது போல் அமைந்து இருக்கிறது.
தமிழகத்தில் வைத்து கொடூரமான முறையில் எங்கள் தலைவர் கொல்லப்பட்டு இருக்கிறார். இதனை, தமிழக மக்கள் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை. இதையெல்லாம், மறந்து விட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி இது போன்று உளறி வருவது ஏன்? என்று எங்களுக்கு புரியவில்லலை. இப்பதவியினை, எனக்கு வழங்கிய என் தலைவர் ராஜிவ் காந்திக்கு செய்யும் துரோகமாக இதனை நான் பார்க்கிறேன்.
ஆகவே, கே.எஸ். அழகிரியின் இச்செயலை கண்டித்தும், உடனே அவர் தனது பதவியினை ராஜினாமா செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது தலைமையில் சுமார் இரு நூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்திபவனில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தன்று (15.7.2022) போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இக்காணொளிதான், தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.