அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என கே.எஸ். அழகிரி அதிரடி தீர்மானத்தை கொண்டு வர கட்சி நிர்வாகிகள் அனைவரும் அதனை வரவேற்று இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் என அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக, தொண்டர்களும், தலைவர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனை, தவிர்க்கும் பொருட்டு கட்சியின் அடிமட்டத்தில் தொடங்கி தலைமை வரை மாற்றங்கள் செய்வது அவசியம். இதற்கு, உரிய தீர்வினை ஏற்படுத்துமாறு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் பலர் கடிதம் எழுதி இருந்தனர்.
தங்களது, கடிதத்திற்கு பதில் கிடைக்கும் என எதிர்ப்பார்த்த, தலைவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து, கடிதம் எழுதிய தலைவர்களை சோனியா குடும்பம் கட்டம் கட்டி ஒதுக்க துவங்கியது. இதனால், மனம் வெறுத்து போன தலைவர்கள் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் தங்களை தொடர்ந்து இணைத்து வருகின்றனர். காங்கிரஸ் மீண்டும் புத்தூயிர் பெற வேண்டும் என்றால், ராகுல் காந்தி தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி முன்மொழிந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. யாருமே இல்லாத கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.