மாவீரன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெக வீரராம பாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன். 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.
அந்த காலத்தில் பாளையத்தில் இருக்கும் போர் படை வீரர்களில் வீரன் அழகுமுத்துகோனின் மிடுக்கு எட்டயபுரத்து மன்னம் மனதில் பதிந்த காரணத்தினால் தானோ என்னவோ அவரை முதன்மை படைத்தளபதியாக அறிவித்து அழகுமுத்துகோனுக்கு சிறப்பு செய்தார். அழகுமுத்துகோனைப் பற்றிக் கிடைக்கப்பெறும் சுயசரிதைக் குறிப்புகள் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரை சார்ந்த ஒன்றாகவே கிடைக்கப்பெறுகின்றது. அவரை திருப்பூர் குமரன் போன்று எந்த சாயமும் இல்லாத சுதந்திரப் போராட்ட வீரராக பதியமுடியாமல் தவறிவிட்டது போலும்.
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டுசேவல் புலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன்.
தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் (அழகுமுத்து) இவர்களின் குடும்பப்பெயர்) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.
வம்ச மணி தீபிகை புத்தகத்தின் கூற்றுப்படி அழகுமுத்து கோனுக்கு
‘சேர்வைக்காரன்’ என்ற பட்டம் உண்டு. ‘சேர்வைக்காரன்’ என்பது எட்டையபுரம் மன்னரின் படையின் முக்கிய தளபதிகளுக்கு கொடுக்கும் சிறப்பு பட்டம். மதுரையிலிருந்து அழகப்பன் சேர்வைக்காரன் தன் உற்றார் உறவினர்களுடன் புறப்பட்டு செமப்புதூர் வந்தார். அங்கு மாப்பிள்ளை வல்லேரு நாயக்கர் உதவியார் எட்டையபுரம் சென்றார். எட்டையபுரத்தை ஆண்ட மன்னர் ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர், அழகுமுத்து கோனை எட்டையபுரத்தின் முக்கிய தளபதியாக நியமித்தார். அதோடு நின்றுவிடாமல் அழகுமுத்துகோனும் அவருடனிருக்கும் வீரர்களும் தங்குவதற்கு கட்டாங்குளம் என்ற ஊரிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எட்டையபுரத்து மன்னன் ஏற்பாடு செய்து தந்தார். அழகுமுத்து கோன் சிறந்த போர் திறமையுள்ள வீரனாகவும் எட்டப்ப மன்னருக்கு நேர்மையுடன் கூடிய சேர்வைக்காரனாகவும் பணியாற்றினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். ஆங்கிலேயர் தளபதி அலெக்ஸாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் வரி வசூலிக்க எட்டயபுரத்தைச் சுற்றி வந்தனர். அமைச்சர் ராமநாதபிள்ளை, அழகுமுத்து கோன், குமார அழகுமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மன்னர் “வியாபாரம் செய்ய வந்த கம்பெனியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை?” என்று கேட்டு கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்தை படித்ததில் கோபமுற்ற கான்சாகிப் தனது பீரங்கி படைகளையும் உடன் சேர்த்துக்கொண்டு பெரும் படைகளை திரட்டி எட்டையபுரம் நோக்கி போரிட வந்தான். இதனை எதிர்பார்த்த எட்டையபுரத்து மன்னன் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதை முதலில் கருத்தில் கொண்டு செயல்பட்டார். ஆனால் கான்சீப் தன் படைகளோடு முற்றுகையிட வந்த தருவாயில் அங்கு படைவீரர்களோ தளபதிகளோ யாருமில்லை என்பதை அறிந்த பிறகு எட்டப்பன் வழிவந்த குருமலைத்துரை என்பவரை மன்னராக எட்டையபுரத்திற்கு நியமித்தான்.
தனது பலமிக்க பெரும் படையை ஏவி பெத்தநாயக்கனூர்கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தான் கான்சாகிப். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலைகுலையாத அழகுமுத்து கோன் துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். இதுவே “சேவைக்காரர் சண்டை கும்மி” பாடல் கூறும் கூற்று.
நமது பூமியை அடக்கி ஆள நினைத்த ஆங்கிலேயர்கலை எதிர்த்து பாளையக்காரர்களின் ஒரே முழக்கம் தான் சுதந்திரப்போராட்டம் தொடங்கிய காலம் முதல் இறுதி வரை ஒலித்தது. “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. யாம் ஏன் உங்களுக்கு கொடுக்க வேண்டும் வரி” என்பதே அது. உணமையில் வீரம் விளைந்த மண் என்ற வழக்காடு இவரைப் போன்ற நெஞ்சில் வீரம் கொண்டவர்கள் வாழ்ந்ததால் தான் வந்ததோ என்னவோ?
வம்சமணி தீபிகை என்ற புத்தகமே வீரன் அழகுமுத்துகோனின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த ஒரு புத்தகத்தை வைத்து தான் அழகுமுத்துகோனின் ஒட்டு மொத்த வாழ்க்கை வரலாறு சார்ந்த தகவல்களை புரிந்துகொண்டு இன்று பலரும் கட்டுரைகளும், புத்தகங்களும் அழகுமுத்துகோனின் கதை கொண்டு வரைகின்றோம்.
“கட்ட மிகுந்திடம் கட்டாலங்குளம் அழகு…” என்று வரும் அந்த
“சேவைக்காரர் சண்டை கும்மி” பாடலே வீரன் அழகுமுத்துகோனின் கைது பற்றி தெளிவாக உரைக்கின்றது. அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு மரணம் அடைந்தனர். நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு வாயிலாக இது தெரிய வந்தது என சுபாஷ்சேவை யாதவ். “முதல் முழக்கமிட்ட மாவீரன் அழகுமுத்து கோன்” என்ற புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டார் பாடல்களில் கூட அழகுமுத்துக்கோனுடைய வாழ்க்கை வரலாறு அறியப்படும் அளவுக்கு தெளிவாக இல்லை. இது என்ன? 1881ல் “தி ஹிஸ்டரி ஆஃப் திருநெல்வேலி” நூலில் சிறு துணுக்காக கூட இடம்பெறாத இவரது சரித்திரம் நம் தலைமுறையினரின் கவனத்திற்கு வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை தான்.
நமது முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம், அழகுமுத்துகோனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தை தயாரித்த நிர்வாகக்குழுக்வின் வேண்டுகோளுக்கு இணங்க அவர், இந்த படத்தை வெளியிட்டுள்ளார். பொதுவாக அரசியல் நிகழ்ச்சிகளும், வங்கி சார்ந்த நிரல்களுக்கு மட்டும் மக்கள் முன் தோன்றும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்த ஆவணப்பட வெளியீட்டிற்கு வந்திருந்தது பலரது குழப்பத்திற்கு ஆளான நிகழ்வு. அப்போது தான் மக்களுக்குத் தெரிந்தது அவருக்கு வரலாற்றுக் கதைகளின் மீதிருக்கும் ஆர்வம்.
ஒருவர், இருவர் என்று இல்லை, அழகுமுத்துகோனைப் பற்றி ஆய்வுகள் செய்த அனைவரும் பிரிட்டீஷ் ராஜை எதிர்த்து போரிட்ட முதல் தமிழ் நாட்டைச் சேர்ந்த போராளியாகவும், தமிழகத்தின் முதல் சுதந்திர போராட்ட வீரரென்றும் தெரிவிக்கின்றனர். அதற்கு சான்றாக நமக்கு கிடைத்திருக்கும் ஒரு ஆதாரப்பூர்வமான குறிப்பு “இவரது வீர வரலாறு 300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது”.
இன்று வரை ஆண்டு தோறும் ஆவணி 1 ஆம் தேதி கட்டாங்குளம் மக்கள், அழகுமுத்துகோனுக்கு அஞ்ச்லி செலுத்தி வருவதாக கள ஆய்வின் போது கட்டாளங்குளம் ஓய்வு தலைமை ஆசிரியர் சுப்புரமணியன் பதிவு செய்துள்ளார்.
கட்டாளங்குளத்தில் தடயங்கள் கள ஆய்வின்போது சிதிலமடைந்து இருக்கும் அழகுமுத்து கோன் அரண்மனை, அழகுமுத்து கோன் பயன்படுத்திய மூன்று வாள், ஒரு குத்து விளக்கு, சிதைந்த நிலையில் உள்ள ஒரு வெண்கொற்றைக்குடை வாரிசுகளில் ஒருவரான துரைசாமி யாதவ் வரைந்த அழகுமுத்துகோன் ஓவியம் மட்டுமே எஞ்சிய தடயங்களாக உள்ளன. இவைகளை கட்டாளங்குளம் ராமச்சந்திரன் பாதுகாத்து வருகிறார்.
தமிழக அரசு, வீரன் அழகுமுத்து கோனுக்கு அழகான மணி மண்டபம் கட்டியுள்ளது. சென்னை எக்மோர் இரயில் நிலையத்திற்கு அருகே அழகுமுத்துகோனுக்கு அழகிய சிலையையும் தமிழக அரசு எழுப்பியுள்ளது. 2015 ஆம் ஆண்டு இந்திய தபால் துறை வீரன் அழகுமுத்துகோனுக்கொன்று தனியாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் படிக்கும் புத்தகங்களில் கூட 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் மூட்டனியை தான் முதல் சுதந்திர போராட்டமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதற்கு முன்பு தமிழ் சுதந்திர போராளிகளின், போராட்ட கதைகளை மறைப்பதற்காகவே வரலாற்றினை பள்ளி மாணவர்களுக்கு மறைந்து பயிற்றுவிக்கின்றனரோ என்ற கேள்வி எழத்தானே செய்யும். எது எப்படியானாலும் வரலாற்றுச் சிறப்புகளை மறைப்பதும் தர்மத்திற்கு எதிரான ஒன்று தான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துஇம் இருக்க முடியாது. அதை சரியான வழியில் அடுத்த தலைமுறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்வது நம் தலைமுறையினரின் கடமை.
– Article By Ravisankar