‘காளி’ படத்துக்கு எதிர்ப்பு: கனடா பல்கலை. மன்னிப்பு!

‘காளி’ படத்துக்கு எதிர்ப்பு: கனடா பல்கலை. மன்னிப்பு!

Share it if you like it

‘காளி’ ஆவணப்படம் சர்ச்சையால் ஆகா கான் அருங்காட்சியகம் மன்னிப்புக் கோரிய நிலையில், தற்போது டொராண்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழமும் மன்னிப்புக் கோரி இருக்கிறது.

திரைப்பட தயாரிப்பாளரும், கவிஞருமான லீனா மணிமேகலை ‘காளி’ என்கிற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். இப்படத்தை கனடாவிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் ‘அண்டர் தி டென்ட்’ திட்டத்தின் கீழ் திரையிடப்பட இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கனடாவைச் சேர்ந்த டொராண்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் செய்திருந்தது. ஆனால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காரணம், காளி சுருட்டு புகைப்பதுபோலவும், ஒரு கையில் ஓரினச்சேர்க்கையாளரின் கொடியை ஏந்திய நிலையிலும் இருந்ததுதான். இதையடுத்து, ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ஆகா கான் அருங்காட்சியகம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான், இப்படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த டொராண்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும் மன்னிப்புக் கோரி இருக்கிறது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணைவேந்தர் முகமது லச்செமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சர்ச்சைக்குரிய மாணவர் டொராண்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக மாணவர் அல்ல என்றாலும், நாங்கள் இதற்கான முழு பொறுப்பையும் ஏற்கிறோம். மேலும், அந்த மாணவரின் போஸ்டர் பல்கலைக்கழகத்தால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்வை நடத்திய டொராண்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக துறை, சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதியளித்திருக்கிறது.

மேலும், சிக்கலான தலைப்புகளை மிகவும் உணர்திறனுடன் ஆராய வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொள்கிறோம். எங்களின் கவனக்குறைவுக்காகவும், இதனால் ஏற்பட்ட வருத்தம் மற்றும் ஏமாற்றத்திற்காகவும் பல்கலைக்கழகம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறது. பல்கலைக்கழகம் கல்வி சுதந்திரம், சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படை கொள்கைகளை ஆதரிக்கிறது. எவ்வாறாயினும், இது பரஸ்பர மரியாதைக்குரிய சூழலில் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை மதிக்கும் ஒரு கல்வி நிறுவனமாக, நாம் சிறப்பாக செய்ய முடியும் மற்றும் செய்ய வேண்டும். இது போன்ற முக்கியமான பிரச்னைகளில் உரையாடல் மற்றும் கல்வியை தொடர்ந்து ஊக்குவிப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it