கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் மணி விழுந்தான் ஊராட்சிக்குட்பட்ட ராமசேசபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
அதனை உறுதிபடுத்தும் வகையில், தலைவாசல் மணிவிழுந்தான் பகுதியில் கள்ளச்சாராயத்தை இருசக்கர வாகனத்தில் பால்பாக்கெட் போல் பாக்கெட் செய்து, குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்துவருகின்றனர் சிலர். மதுகுடிப்போர் இருக்கும் இடத்திற்கே வந்து டோர் டெலிவரி செய்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பது வாடிக்கையாகி உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரம் குறித்து ஆத்தூர் டி.எஸ்.பி சதீஷ்குமாரிடம் கேட்டபோது… “கள்ளச்சாராயம் தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடியோ குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை முன்னிட்டு மதுவால் இளம் விதவைகள் அதிகமாகி விட்டனர் என திமுக அமைச்சர் கனிமொழி பேசிய காணொளியை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி திமுக ஆட்சி என்று வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறார்.