கள்ளக்குறிச்சியில் கடந்த 19-ம்தேதி கள்ளச் சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் கள்ளச் சாராய உற்பத்தி, பதுக்கல் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச் சாராய வியாபாரிகளைக் கண்டறிந்து, அவர்களைப் போலீஸார் கைது செய்துவருகின்றனர்.
மேலும், கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழப்பு நிகழ்வதற்குக் காரணமாக இருந்தவர்களை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சங்கராபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்வதாக, சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்து, சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் இடையே சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மணிகண்டன், திடீரென காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடினார். அதிர்ச்சியடைந்த போலீஸார், தப்பியோடிய விசாரணைக் கைதியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டையே உலுக்கிய கள்ளச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை சுலபமாக தப்பிக்க விடப்பட்டுள்ள நிகழ்வானது தமிழக மக்களுக்கு தமிழக காவல்துறை மீதான நம்பிக்கையை குறைத்து அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளச்சாராய சம்பவத்தை மக்கள் புகார் அளித்தும் காவல்துறையினரால் தடுக்க முடியவில்லை. தற்போது குற்றவாளியை கைது செய்தும் போலீசார் கோட்டை விட்டுள்ளனர்.