சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுவை மற்றும் சேலம் ஆகிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பலர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி வருகின்றனர். மேலும், இச்சம்பவமானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் எழுப்பப்பட்டு, உரிய விசாரணை வேண்டும் என எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுட்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்தன.
மேலும், இக்குற்ற சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கள்ளச்சாராயம் மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒரே ஆதாரமாக உள்ள நிலையில் அதனை ஒழிக்கும்பட்சத்தில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர். கல்வராயன் மலைப்பகுதியாக உள்ளதால் அந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.
அந்த பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டுமெனவும் நீதிபதிகள் கூறினர். அந்த பகுதிக்கு தாங்கள் செல்வதைவிட, தமிழக முதலமைச்சர் சென்று பார்வையிட்டால் அந்த பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை விளையும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அவ்வாறு முதலமைச்சரால் அங்கு செல்ல முடியவில்லை என்றால் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆதித்திராவிடர் நலத் துறை அமைச்சருடன் சென்று கல்வராயன் மலைப் பகுதியை பார்வையிடலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முதல்வராக இருந்துக்கொண்டு பெருந்துயரமான சம்பவம் நடந்த கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அந்த பகுதியில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன நடவடிக்கை என்று திட்டமிடாமல் வெறும் வாயிலே இது திராவிட மாடல் ஆட்சி, எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று வீண் தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றமே தலையிட்டு தமிழக அரசுக்கு எடுத்து கூறினால் தான் நடவடிக்கை எடுப்பாரா ? தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில மக்களுக்கு தேவையான வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றாமல் இருப்பது தமிழக மக்களுக்கு திமுக அரசின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர்.