மாணவி ஒருவர் பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா ஆலம்பாக்கத்தில் இருக்கிறது அரசு உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர்தான், பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த மாணவி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியானதும் ஊர் மக்கள் கொந்தளிப்படைந்தனர். மாணவியை பள்ளி ஆசிரியர்களோ அல்லது தூய்மைப் பணியாளர்களோ கழுவச் சொன்னார்களா என்பது தெரியவில்லை. அதேபோல, இதை வீடியோ எடுத்தது யார் என்பதும் தெரியவில்லை.
அதேசமயம், இதை யாரோ திட்டமிட்டுத்தான் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இப்பள்ளியில் பணிபுரியும் யாரையோ பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். ஏனெனில், இதேபோல, பள்ளி மாணவ, மாணவிகளை கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவங்கள் நிறைய. அப்படி இருக்க, இப்படியொரு வீடியோ வெளியாகி இருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்பது புலனாகிறது. ஆகவே, இந்த வீடியோ விவகாரத்தில் ஏதேனும் உள்நோக்கம் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
இதனிடையே, இந்த விவகாரம் பூதாகரமாகி, மாவட்ட கலெக்டர் வரை சென்றது. இதைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியை புஷ்பாவதி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, புஷ்பாவதியை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டிருக்கிறார். அதேசமயம், மாணவியை கழிவறையை சுத்தம் செய்யச் சொன்னது யார்? அந்த வீடியோவை எடுத்தது யார்? அவர்களின் உள்நோக்கம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.