டெல்லி தி.கார் சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சரின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின், அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர், உள்துறை, மின்சாரம், பொதுப்பணித் துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சித்துறை என்று பல முக்கிய இலாகாக்களையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் 1.62 கோடி ரூபாய் வரை பணமோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணையை நடத்தியது.
இதையடுத்து, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சத்யேந்திர ஜெயின் உள்பட 3 பேரை கடந்த மே மாதம் 30-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் சத்யேந்திர ஜெயின் வீடு மற்றும் அலுவலகம், உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், கணக்கில் வராத பணம், 1.80 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, சத்யேந்திர ஜெயின் டெல்லி தி.கார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட சூழலில், கட்டில், மெத்தை, டிவி என அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தி.கார் சிறையில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வரும் காணொளியை சன்.டிவி வெளியிட்டுள்ளது. பணம், பதவி மற்றும் தனது செல்வாக்கினை பயன்படுத்தி சிறையில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வரும் அமைச்சருக்கு கடும் தண்டனையை கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, மத்தியில் காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் தி.மு.க.வும் ஆட்சியில் இருந்த சமயத்தில் தான், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோர் தி.கார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
சாதாராண ஒரு டெல்லி அமைச்சருக்கு கிடைத்த சலுகைகள், அதிகார உச்சத்தின் இருந்த கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டவர்களுக்கு ஏன்? கிடைத்து இருக்க கூடாது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதான், அரசியல் தலைவர்கள் சிறையில் அனுபவிக்கும் தண்டனையா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.