குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அழைத்தும் நகராட்சி பணியாளர்கள் வராததால், தானே பைப்லைனை சரிசெய்து தனது வார்டு மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்திருக்கிறார் பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது குழித்துறை நகராட்சி. இங்கு 16-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த ரத்தினமணி. இவரது வார்டு மக்களுக்கு குடிநீர் வழங்கும் பைப்லைன் உடைந்து, தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. எனவே, இதுகுறித்து நகராட்சி ஒப்பந்ததாரரிடம், குடிநீர் வடிகால் வாரியத்திலும் புகார் செய்திருக்கிறார். ஆனால், குடிநீர் பைப்லைனை சரி செய்ய நகராட்சிப் பணியாளர்களும் வரவில்லை, குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களும் வரவில்லை.
இப்படி பலமுறை புகார் செய்தும் யாரும் வரவில்லை. அதேசமயம், வார்டு மக்களோ தண்ணீர் வராததால் பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து கவுன்சிலர் ரத்தினமணியிடம் புகார் செய்தனர். இதையடுத்து, களத்தில் இறங்கிய ரத்தினமணி, தானே மண்வெட்டியைக் கொண்டு குழிதோண்டி, பைப்லைனை சரி செய்தார். பின்னர் வழக்கம்போல வார்டு மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, வார்டு மக்கள் பா.ஜ.க. கவுன்சிலர் ரத்தினமணியை பாராட்டி வருகின்றனர். இதையறிந்த பக்கத்து வார்டு மக்களும், நமக்கு இப்படியொரு கவுன்சிலர் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கத்தில் புலம்பி வருகின்றனர்.