பைபிள் நல்லது, பகவத்கீதை கெட்டது என்று சொல்லி ஹிந்து மாணவிகளை ஆசிரியை மூளைச்சலவை செய்ததாக எழுந்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் மத மாற்றம் என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இதற்கு உதாரணம்தான் தஞ்சாவூரில் நடந்த சம்பவம். அதாவது, அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா. தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த இம்மாணவியை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறது பள்ளி நிர்வாகம். இதற்கு மறுப்புத் தெரிவித்த மாணவியை, பள்ளி மற்றும் விடுதி கழிப்பறைகளைச் சுத்தம் செய்யச் சொல்வது, சமையல் செய்த பாத்திரங்களை கழுவச் சொல்வது, தோட்ட வேலைகளை பார்க்கச் சொல்வது என தொடர்ந்து வேலை கொடுத்து கொடுமைப் படுத்தி இருக்கிறார்கள், அங்கிருந்த கன்னியாஸ்திரிகள். இதனால், மனமுடைந்த லாவண்யா, பூச்சி மருந்தை குடித்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் பாதிப்பே இன்னும் அடங்காத நிலையில், கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளை மதம் மாற வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் இருக்கிறது அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு, தையல் கலை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் பியாட்ரீஸ் தங்கம். இவர், தையல் பழகவரும் மாணவிகளிடம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தி இருக்கிறார். அதோடு, ஹிந்து கடவுள்களை அவதூறாகப் பேசியதோடு, பகவத்கீதை கெட்டது, பைபிள்தான் நல்லது. பைபிளில் இடம்பெற்றிருக்கும் கருத்துகள் நல்லவை என்று சொல்லி மாணவிகளை மூளைச் சலவை செய்திருக்கிறார். மேலும், கிறிஸ்தவம் பற்றிய பல்வேறு கதைகளைச் சொல்லியும் மாணவிகளை மடைமாற்றம் செய்ய முயற்சித்திருக்கிறார். தவிர, கிறிஸ்தவ மத பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் வற்புறுத்தி இருக்கிறார்.
இந்த விஷயம் அரசல்புரசலாக வெளியே கசந்திருக்கிறது. சில ஹிந்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, ஆசிரியை பியாட்ரீஸ் தங்கத்தை சஸ்பெண்ட் செய்த கலெக்டர், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கும் உத்தரவிட்டார். அதன்படி, சி.இ.ஓ. புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் ஆசிரியையின் மதமாற்ற மூளைச்சலவை குறித்து மாணவிகள் கூறும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.