வேணுகோபால் கமிஷன் அறிக்கையை மீறி புதிதாக 54 சர்ச்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதை கண்டித்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி தலைமையில் டிசம்பர் 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் கூட்டாக அளித்த பேட்டியில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன், ஒரு வழிபாட்டுத் தலத்தின் அருகே, இன்னொரு வழிபாட்டுத் தலம் அமைக்கக் கூடாது என்று கூறியிருக்கிறது. அப்படி இருக்க, அமைச்சர் மனோ தங்கராஜின் வற்புறுத்தலால், வேணுகோபால் கமிஷனை மீறி புதிதாக 54 சர்ச்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி இருக்கிறது. இது கண்டனத்துக்கு உரியது.
எனவே, வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை மீறி, கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்த முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரை பதில் இல்லை. ஆகவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி டிசம்பர் 11-ம் தேதி நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க. சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவிருக்கிறது. இதில், மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அனைத்து சமூகத்தினரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, மாவட்ட நிர்வாகம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வருத்தம் அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடதப்பட்ட கூட்டத்தில் அமைச்சர், மேயர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், அமைச்சரின் மகனும் கலந்து கொண்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்களை மாவட்ட நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினர். இப்பேட்டியின்போது மாநிலச் செயலாளர் மீனாதேவ், உமாரதி ராஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.