சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு தலைப்பாகை கட்டாமல் உதயநிதி சென்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அவர், நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று பல்வேறு தரப்பினரும், அய்யா வழியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி அமைந்திருக்கிறது. இங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அவரை, அய்யா வழி தலைமை பதி நிர்வாகி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், கோயிலின் பள்ளியறை வரை சென்று உதயநிதி தரிசனம் செய்தார். ஆனால், சாமிதோப்பு தலைமை பதியில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் தலைப்பாகை மற்றும் திருநாமத்தை உதயநிதி வைத்துக்கொள்ளவில்லை. அதேபோல, உதயநிதியுடன் சென்ற மேயரும் தலைப்பாகை அணியவில்லை. இதுதான் கடுமையான விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது.
இந்த நிலையில், உதயநிதியின் செயலுக்கு அய்யாவழி மதபோதகர் ஶ்ரீகுரு சிவசந்திர சுவாமிகள் கண்டனம் தெரவித்திருக்கிறார். இதுகுறித்து சிவசந்திர சுவாமிகள் கூறுகையில், ‘கடவுளே இல்லை என்ற கொள்கையை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான ஒருவர் இந்த திருநடைக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். ஆனால், அய்யா வழிக்கு என ஒரு நடைமுறை இருக்கிறது; அதற்கு மாறாக, தலையில் தலைப்பாகை அணியாமலும், நெற்றியில் திருநாமம் இடாமலும் பள்ளி அறைக்குச் சென்றது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மேற்கண்ட சம்பவத்துக்கு முகநூலில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் சாமிதோப்பு தலைமை பதி நிர்வாகி பால ஞனாதிபதி. இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘அய்யா வைகுண்டர் காலடி தொழுது எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். நான் அழைக்கவில்லை. வருவதாக மேயர் தகவல் சொன்னார். நான் மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். சட்டையிடாமல் தலைப்பாகையுடன் வரவேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் ஏற்றுக் கொண்டேன். அதேபோல, 5 நபர்கள்தான் உள்ளே வருவார்கள் என்றார்கள். ஏற்றுக் கொண்டேன். நெருக்கடி தள்ளுமுள்ளு வகையற்ற நிலையில் நடந்துவிட்டது. அய்யாவழியினரை பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். எனினும், இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. உதயநிதிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.