வெள்ளிமலை முருகன் கோயில் ஆலய முன்னேற்ற சங்க கட்டடத்தை அறிநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் பக்தர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலையில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கிறார்கள். தவிர, பண்டிகை காலங்களில் இக்கோயில் களைகட்டி இருக்கும். இக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் சங்கத்தின் மூலம் ஆலய முன்னேற்ற சங்கக் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கட்டடத்தை கடந்த 2004-ம் ஆண்டு ஆலய முன்னேற்ற சங்கத்தினரே மராமத்துப் பணிகளை பார்த்து புதுப்பொலிவுடன் கட்டடத்தை திறந்தனர். இந்த சூழலில், இன்று காலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீரென அந்தக் கட்டடத்தை பூட்டி சீல் வைத்திருக்கிறார்கள். இதுதான் பக்தர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இதையடுத்து, ஆலய முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகளும், பக்தர்களும் சம்பவ இடத்தில் குவிந்தனர். என்ன காரணத்திற்காக ஆலய முன்னேற்ற சங்கத்தின் கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்? என்று கேள்வி எழுப்பி சங்க அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆலய கட்டடத்தை மீண்டும் திறக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். தவிர, முருக பக்தர்களும் ஹிந்து அமைப்புகளும் ஆலய முன்னேற்ற சங்கத்தினருக்கு ஆதரவாக களத்தில் குதித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.