மதமாற்ற சதித்திட்டமா?

மதமாற்ற சதித்திட்டமா?

Share it if you like it

1712 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23 அன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்ற கிராமத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த காயங்குளம் வாசுதேவன் நம்பூதிரிக்கும், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள நாயர் சமுதாயத்தைச் சேர்ந்த தேவகி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார், நீலகண்டன்.

சிறு வயது முதலே வில் வத்தை, வர்மக் கலை போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். பல மொழி புலமையும் பெற்று இருந்தார். மார்த்தாண்ட வர்மாவின் அரண்மையான பத்மநாபபுரம் கோட்டையில், கருவூல அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

மதம் மாறிய நீலகண்டன் :

நீலகண்டனுக்கு “கிறிஸ்தவம்” என்னும் மதம் ஒன்று இருப்பதை,  டிலன்னாய் என்பவர் அறிமுகப் படுத்தி வைத்ததாகக் கூறப் படுகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் வடக்கன் குளத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில், பங்குத் தந்தையாக இருந்த “ஜோவான்னி பத்தீஸ்தா புத்தாரி” (Giovanni Battista Buttari) என்பவர் நீலகண்டனுக்கு திருமுழுக்கு செய்து, இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றி, “தேவசகாயம்” என்ற பெயரை சூட்டினார்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நீலகண்டன், தனது பெயரை தேவசகாயம் என மாற்றி, பல இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாக வரலாற்று உண்மைகள் கூறப் படுகின்றது.

சுட்டுக் கொல்லப்பட்ட தேதியில் குழப்பம் :

நீலகண்டன் மதம் மாறி, தேவசகாயம் என பெயரையும் மாற்றிக் கொண்டதால், அவர் மீது கோபம் கொண்ட மன்னர், அவரை சுட்டுக் கொல்லும் படி ஆணையிட்டதாகவும், அதனால் திருவிதாங்கூர் அரசக் கட்டளையின் படி, ஜனவரி மாதம் 14 அன்று, 1752 ஆம் வருடம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி அருகே காற்றாடி மலையில், அவர் சுடப் பட்டதாக சொல்லப் படுகிறது.

கேரள கிறிஸ்தவ வரலாற்றுப் படி, தேவசகாயம் பிள்ளை, ஜனவரி 13 அன்று, சுடப் பட்டதாக சொல்லப் படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடியைச் சேர்ந்த C.M. ஆகர் அவர்களால் எழுதப்பட்ட “திருவிதாங்கூர் சர்ச் வரலாறு” என்ற புத்தகம், தேவசகாயம் கொல்லப் பட்ட நாள், ஜனவரி 15 என்கிறது.

இந்துக்கள் புனிதமாகக் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, தை மாதம் முதல் நாளான ஜனவரி 14 அல்லது ஜனவரி 15 அன்று வரும். மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று, போகி பண்டிகை வரும். அது பெரும் பாலும், ஜனவரி 13 அல்லது ஜனவரி 14 அன்று இருக்கும்.

இந்துக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் பொங்கல் பண்டிகையின் போது, குழப்பத்தை ஏற்படுத்தவே, இவ்வாறு தேதியை குழப்பி உள்ளதாக, வரலாற்று ஆய்வாளர்கள் எழுதி வருகின்றனர்.

எவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பார்?! :

திருவிதாங்கூர் மன்னரின் படைகள் வில், அம்பு, ஈட்டி, வாள் மற்றும் கோடாரிப் போன்றவைகளையே ஆயுதமாகக் கொண்டு இருந்தது. அவர்களிடம் துப்பாக்கி இல்லை. பின்னர் எப்படி அவர், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பார் என, வரலாற்று ஆய்வாளர்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதுவரை யாரும், அதற்கு சரியான பதிலை அளிக்கவில்லை.

திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில், கொடிய தண்டனையான மரண தண்டனை விதிக்க, “கழுப் பெட்டகம்” என்ற கூண்டுக் கருவியே, பயன்பாட்டில் இருந்தது. அந்தக் கூண்டுக் கருவியானது, பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில், இன்றும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளன. அவ்வாறு இருக்கையில், தேவசகாயம் பிள்ளை மட்டும் எவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பார்? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். கழுவேற்றத்தில் ஏற்றாமல், சுட்டுக் கொல்லப்பட்டு இருக்க, வாய்ப்பே இல்லை எனவும், ஆதாரத்துடன் விளக்கிக் கூறி வருகின்றனர்.

மறைமாவட்டத்தின் கோரிக்கை :

1993 ஆம் ஆண்டு, தேவசகாயத்திற்கு “புனிதர்” பட்டம் அளிக்க, கோட்டாறு மறைமாவட்ட ஆயர் முயற்சியை மேற்கொண்டார். பின்னர்  2004 ஆம் ஆண்டில், கோட்டாறு மறைமாவட்டம், தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை போன்ற அமைப்புகள் இணைந்து, கத்தோலிக்க தலைமை இடத்திற்கு, புனிதர் பட்டம் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கையை, எட்டு வருடம் கழித்து ஏற்று, 2012 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 28 அன்று, போப் பெனடிக்ட் XVI அவர்கள், “வணக்கத்திற்குரியவர்” என்ற அந்தஸ்தை, தேவசகாயத்திற்கு  வழங்கினார்.

அதிசயம் நிகழ்ந்ததா?! :

2013 ஆம் ஆண்டில், இருபத்தி நான்கு வாரங்கள் நிறைந்த, ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த சிசுவின் இதயத் துடிப்பு, நின்று போனதாகவும், அதனால், அந்த கர்ப்பிணிப் பெண் தேவசகாயம் பிள்ளையை வேண்டியதாகவும், ஒரு மணி நேரத்திற்குள் நிலைமை சரியாகி, அந்தக் குழந்தை வயிற்றுக்குள் உதைப்பதை அந்தப் பெண் உணர்ந்ததாகவும், பின்னர், எந்த சிரமும் இன்றி, அந்தக் குழந்தையை அந்தத் தாய் பெற்று எடுத்ததாகவும், கத்தோலிக்க கிறித்தவ சபை உறுதி செய்தது.

நிலைத்து இருக்கக் கூடியதா புனிதர் பட்டம் :

1962 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி முதல் 1965 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை மட்டுமே, வாடிகன் கவுன்சில் 2 ஆயிரம் நபர்களை, போதிய ஆதாரங்கள் இல்லாதக் காரணத்தினால், புனிதர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.

போலியாக உருவாக்கப் பட்டதா?! :

தேவசகாயம் பிள்ளையின் நினைவு இடங்களாக அடையாளப் படுத்தப் படும் நட்டாலம், புலியூர்குறிச்சி, காற்றாடி மலை போன்ற இடங்களில் இடம் பெற்று உள்ள கல்வெட்டில் பொறிக்கப் பட்டு உள்ள எழுத்துக்கள், நவீன  காலத்தில் பயன்படுத்தப் படும், தமிழ் எழுத்துக்களை உள்ளடக்கியே உள்ளது. அவர் மறைந்த உடனேயே, அந்த இடத்தில் கல்லறை எழுப்பப் பட்டு இருந்தால், அந்தக் கல்லறையில், அந்தக் காலத்தில் பயன்பாட்டில் உள்ள எழுத்துக்களே, பொறிக்கப் பட்டு இருக்க வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள எழுத்துக்கள் ஏன் உள்ளன? என வரலாற்று ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

“நீலகண்ட பிள்ளை” என்ற பெயரிலோ அல்லது “தேவசகாயம் பிள்ளை” என்ற பெயரிலோ, மார்த்தாண்ட வர்ம மகாராஜா காலத்தில், ஒரு ராணுவத் தளபதியும் இருந்ததே இல்லை, என இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவராக இருந்த எம். ஜி. எஸ். நாராயணன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

திருவிதாங்கூர் வரலாற்றில், மதம் மாற்றத்தின் பெயரால், ஒரு சிறு தண்டனைக் கூட வழங்கப் பட்டதாக, எங்கும் எதிலும் பதிவு செய்யப் படவில்லை என, கேரளாவில் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரான ஏ. ஸ்ரீதர மேனன் குறிப்பிட்டு உள்ளார்.

மதமாற்றத்தை எதிர்த்த மன்னர், தேவசகாயம் பிள்ளையை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக கூறுகிறார்களே,  மதமாற்றத்தை அந்த மன்னர் எதிர்த்து இருந்தால், நீலகண்டனாக இருந்த தேவசகாயம் பிள்ளை, இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு, மாறியே இருந்து இருக்க முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சாதி ஏற்றத் தாழ்வை எதிர்த்தார் எனக் கூறுகிறார்களே, பின்னர்  ஏன் “பிள்ளை” என்ற அடைமொழியுடன், அவர் அழைக்கப் படுகின்றார்?

தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் கேரளா, தமிழகத்தில், மதம் மாற்றத்தை ஊக்குவிக்கவே, இது போல் செய்யப் படுகின்றனவோ? என்ற சந்தேகத்தையும், சமூக ஆர்வலர்கள் பலர், கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு – திருக்குறள்

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

உதவிய நூல்குமரி மாவட்ட வரலாற்றுப் பேரவை வெளியிட்ட குமரியை இழிவு படுத்தும் புனிதப் புரட்டு


Share it if you like it