உலகமே போற்றும் உன்னத தலைவர் கர்மவீரர் காமராசர் !

உலகமே போற்றும் உன்னத தலைவர் கர்மவீரர் காமராசர் !

Share it if you like it

நாம் அனைவருக்கும் ஜூலை 15-ஆம் தேதி என்றால் முதலில் நியாபகம் வருவது கர்மவீரரின் பிறந்த நாளாக தான் இருக்கும். இப்படிப்பட்ட காமராஜரை நாம் பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்மவீரர் மற்றும் கல்விக் கண் தந்தவர் என்று எல்லாம் அழைகின்றோம். இவ்வளவு சிறப்புகளை கொண்ட காமராஜரின் பிறந்த நாளினை தான் கல்வி வளர்ச்சி நாளாக நாம் கொண்டாடி வருகிறோம்.

பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாகப் பிறந்தவர் காமராஜர். எளிய குடும்பத்தில் பிறந்தவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காக திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடு அறிமுகத்தால் 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார் காமராஜ்.

காமராஜர் வாழ்க்கை: 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார் காமராஜர். தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார்.

மேலும், 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராசர், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்.

பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராக காமராஜர் செயல்பட்டார்.

ஏழைகள் படிக்க: ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார். விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

1964 ஆம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராசர், நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை இரண்டு முறை தேர்ந்தெடுப்பதில் ‘கிங் மேக்கராக’ விளங்கினார். காமராசரின் மறைவுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *