பர்தா அணியவில்லை என்றால்…! தாலிபான் கூடாரமா கர்நாடகா?

பர்தா அணியவில்லை என்றால்…! தாலிபான் கூடாரமா கர்நாடகா?

Share it if you like it

பர்தா அணியாதவர்கள் மற்றும் பர்தாவை கழற்றி செல்ஃபி எடுப்பவர்கள் தாக்கப்படுவார்கள் என்று மங்களூருவில் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு முஸ்லிம் குழு ஒன்று மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே, கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சை வெடித்த நிலையில், தற்போது பர்தா விவகாரமும் சேர்ந்து கொண்டிருப்பதால் தாலிபான்களின் கூடாரமாக கர்நாடகா மாறி வருகிறதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

கர்நாடகாவில் கடந்த ஜனவரி மாதம் திடீரென ஹிஜாப் சர்ச்சை வெடித்தது. அதாவது, உடுப்பி பி.யூ, கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் மாணவிகள் சிலர் திடீரென ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வரத் தொடங்கினர். இதற்கு, கல்லூரி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்ததால், தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தால் நாங்கள் காவி ஷால், துண்டு அணிந்து வருவோம் என்று ஹிந்து மாணவ, மாணவிகள் களத்தில் குதித்தனர். இதனால், மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது என்று மாநில அரசும், கோர்ட்டும் தடை விதித்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து, இப்பிரச்னை தணிந்து வருகிறது. அதேசமயம், ஹிஜாப் போராட்டத்தின்போது அல்லாகூ அக்பர் என்று கத்திய மாணவி முஸ்கான் கானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் அல்கொய்தா அமைப்பின் தலைவர் அல் ஜவாஹிரி. மேலும், பாகிஸ்தானியர்களும், தாலிபான்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த ஹிஜாப் விவகாரத்தில் அல்கொய்தா மற்றும் தாலிபான்களின் சதி இருப்பதாக அப்போதே கூறப்பட்டது.

இந்த நிலையில், இதை மெய்ப்பிக்கும் வகையில், கர்நாடகாவில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, முஸ்லிம்களும், முஸ்லிம் பெண்களும் பர்தா அணியாமலோ அல்லது பர்தா அணிந்திருந்து செல்ஃபி எடுப்பதற்காக பர்தாவை அகற்றினாலோ தண்டிக்கப்படுவீர்கள் என்று மிரட்டல் விடுத்திருக்கிறது முஸ்லிம் டிஃப்ன்ஸ் ஃபோர்ஸ் (எம்.டி.எஃப்) என்கிற அமைப்பு. இது தொடர்பாக, ‘முஸ்லிம் பாதுகாப்புப் படை 24×7’ என்ற பெயரில் சில செய்திகள் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும், பேஸ்புக் தளங்களிலும், வாட்ஸ் ஆப்களிலும் பரவி வருகின்றன. அதில், ‘முஸ்லிம் பெண்கள் அனைவரும் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும். அதேபோல, பர்தா அணிந்திருந்து ஆண்களுடன் நடந்து செல்லும்போது செல்ஃபி எடுப்பதற்காக பர்தாவை கழற்றினால் தண்டிக்கப்படுவீர்கள். இது குறித்து தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர் எச்சரிக்க வேண்டும். உங்களை எங்களது அமைப்பு கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. நமது கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களது கடமை. இல்லை என்றால் நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து, மங்களூரு பகுதி முஸ்லிம்கள் மாவட்ட காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து மங்களூரு காவல் ஆணையர் சஷி குமார் கூறுகையில், “முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணியாமல் சென்றால் தாக்குதல் நடத்தப்படும். அதேபோல, ஆண்களுடன் நடந்து செல்லும்போது பர்தாவை கழற்றி செல்ஃபி எடுக்கும் பெண்கள் பெற்றோர்களால் எச்சரிக்கப்பட வேண்டும். தவிர, மால் பேஸ்மென்ட்களில் பலர் பர்தா அணிந்து தவறாக நடந்துகொள்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களை எங்கள் குழுவினர் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதை மீண்டும் பார்த்தால், நீங்கள் அடிக்கப்படுவீர்கள். மேலும், தங்களது குழந்தைகள் கல்லூரி மற்றும் பிற பொது இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் பர்தா அணிந்திருக்கிறார்களா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். இந்த செய்திகள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் பக்கங்களில் பரவி வருகின்றன. இதை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். எனனும், இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை’ என்றார்.

மேலும், “முஸ்லிம் பெண்கள் எந்தவிதமான மதச் சடங்குகளையும் மீறாமல் பாதுகாப்பது தங்களின் கடமை என்றும், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர்கள் கற்றுக்கொடுக்காத வரையில், மால் அல்லது பிற பொது இடங்களில் பர்தா அணியாமல் காணப்படுபவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும்” என்றும் கூறியிருப்பதாகத் தெரிவித்தவர், “இந்த தகவலை பகிர்ந்துள்ள சில எண்களை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். இந்த தகவலின் மூலத்தை நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ஆகவே, முஸ்லிம் பெண்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எங்கு சென்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து பேசிய பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத், “அரசியலமைப்புச் சட்டத்தையோ, சட்டத்தையோ யாரும் தங்கள் கைகளில் எடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார். அதேபோல, முஸ்லிம் சமூகத் தலைவர்களும் முஸ்லிம் பாதுகாப்புப் படையின் செயல்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். “கல்வி கற்கும் முஸ்லிம் பெண்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்கத்தை பெற்றோர்களும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரி தாலிபான் கலாசாரம் நம் நாட்டில் நடக்காது. இந்தியா அரசியலமைப்பு அடிப்படையிலான நாடு, ஷரியா அடிப்படையிலான நாடு அல்ல. நீங்கள் இந்த நாட்டில் இருக்க விரும்பினால், நீங்கள் இந்திய நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்” என்று முஸ்லிம் தலைவர் ரஹீம் உச்சில் கூறியிருக்கிறார்.


Share it if you like it