கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் பணக் கட்டுகளை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது.
கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, கடந்த 2 மாதகாலமாகவே ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் களத்தில் குதித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாரத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கர்நாடகாவில் பிரசாரம் செய்தனர். அதேபோல, காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். மேலும், கர்நாடக மாநிலத்திலுள்ள இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம், கர்நாடகாவில் பெரும்பான்மையான சமூகமாக விளங்குவது ஒக்கலிகா கவுடாதான். ஆகவே, அச்சமூகத்தின் ஓட்டு வங்கியை கைப்பற்றும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றன. இதற்காக, கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்த ஆளும் பா.ஜ.க. அரசு, அதை இரண்டாகப் பிரித்து ஒக்கலிகா சமூகத்திற்கு 2 சதவிகிதம் வழங்கி இருக்கிறது. எனினும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த டி.கே.சிவக்குமார். எனவே, தனது செல்வாக்கை பயன்படுத்தி, அச்சமூக ஓட்டுக்களை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கி இருக்கிறார்.
இந்த நிலையில்தான், ஒக்கலிகா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில், சிவகுமார் திறந்த பேருந்தில் பிரசார யாத்திரை சென்றார். அப்போது, கூடியிருந்த பொதுமக்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்தார். இக்காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறது. சிவக்குமாரின் இந்த செயல்பாடு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.