பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று தி.மு.க.வைப் போலவே காங்கிரஸ் கட்சியும் போலி வாக்குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றி இருக்கிறது. இதனால், கர்நாடக மக்கள் லபோதிபோ என்று அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை வாக்குறுதிகளாக தி.மு.க. அறிவித்தது. குறிப்பாக, இலவச பஸ் பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை, சமையல் காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் ஆகிய திட்டங்களும் அடங்கும். இதை நம்பி பெண்கள் ஓட்டுப்போட தி.மு.க.வும் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல, சமையல் காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமும் வழங்கப்படவில்லை. தவிர, இலவச பஸ் பயணமும் குறிப்பிட்ட சில நகரப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி என்று அறிவித்து விட்டார்கள். இதனால், தமிழக பெண்கள் நொந்து நூடுல்ஸாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில். தமிழகத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை காப்பியடித்து, கடந்த மே மாதம் நடந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதிகளை வாரி வழங்கியது காங்கிரஸ் கட்சி. இதில், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 2,000 ரூபாய் உரிமைத்தொகை ஆகிய திட்டங்களும் அடங்கும். இத்தேர்தலில் தி.மு.க.வைப் போலவே காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க.வைப் போலவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டது. குறிப்பிட்ட பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்று அறிவித்து விட்டது. அதேசமயம், தமிழகத்தைப் போலவே இலவச பஸ் பயணம் என்பதால் பெண்களை தரக்குறைவாக நடத்துவதோடு, பஸ்ஸில் ஏற்றுவதையும் தவிர்த்து வருகிறார்கள்.
இதையும் மீறி ஏறும் பெண்களை வலுக்கட்டாயமாகவும், தாக்கியும் பஸ்ஸில் இருந்து இறக்கி விடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், பஸ்ஸில் இலவச பயணம் செய்த பெண்களை பஸ் கண்டக்டரும், டிரைவரும் சேர்ந்து தாக்கி இறக்கி விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.