கர்நாடகாவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அம்மாநில போலீஸார் தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவரும், பயணியும் படுகாயமடைந்தனர். இது திட்டமிட்ட தாக்குதல் என்று கர்நாடக மாநில போலீஸார் உறுதி செய்தனர். ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரிக் என்பவன்தான் குற்றவாளி என்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, கோவை கார் குண்டைப் போலவே இங்கு குக்கர் வெடிகுண்டை ரெடி செய்து, ஏதாவது ஒரு கூட்டமான இடத்தில் வைத்து வெடிக்கச் செய்வதுதான் அவனது திட்டம். ஆனால், கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்தது போல, இங்கு ஆட்டோவிலேயே வெடித்து விட்டது குக்கர் வெடிகுண்டு. கோவை சம்பவத்தில் குற்றவாளி ஜமேஷா முபீன் உயிரிழந்து விட்டான். ஆனால், இச்சம்பவத்தில் முகமது ஷாரிக் உயிர் தப்பிவிட்டான்.
இதையடுத்து, முகமது ஷாரிக்கின் மொபைல் எண்ணை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். அப்போதுதான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, முகமது ஷாரிக் கடந்த 2020-ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவன். 2021 ஜூலை மாதம் ஜாமீனில் விடுதலையானவன் திடீரென தலைமறைவாகி விட்டான். இதுதவிர, அவன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையே, கடந்த 4-ம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்த முகமது யாசின், முஜ் முனீர் ஆகியோரை கர்நாடக போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கிலும் ஷாரித் தேடப்படும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, முகமது ஷாரிக்கை கர்நாடக போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். விசாரணையில், தமிழகத்தின் கோவை சிங்காநல்லூர் பகுதியிலுள்ள ஒரு லாட்ஜில் கடந்த செப்டம்பர் மாதம் முகமது ஷாரிக் தங்கியது கண்டறியப்பட்டது. இந்த சமயத்தில், கோவையிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் உதகையைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரை ஷாரிக் சந்தித்திருக்கிறான். மேலும், சுரேந்திரனின் ஆதார் கார்டை பயன்படுத்தி மொபைல் சிம் கார்டும் வாங்கி இருக்கிறான். எனவே, உதகை போலீஸார் சுரேந்திரனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷாரிக்கிற்கும், சுரேந்திரனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இதையடுத்து, தமிழக எல்லைப் பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டப் பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தவிர, பயங்கரவாதி முகமது ஷாரிக்கின் செல்போன் எண்ணுக்கு, நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் பணிபுரியும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான் என்பவரின் செல்போனில் இருந்தும் அழைப்பு வந்திருக்கிறது. ஆகவே, குமரி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அஜிஜுர் ரகுமானிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், திருநெல்வேலி, நாகர்கோவில் போலீஸாரும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில்தான், மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தில் இருக்கும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கர்நாடக மாநில போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆகவே, கர்நாடக மாநில போலீஸார் தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, பயங்கரவாதி முகமது ஷாரிக், பயங்கரவாத செயலை அரங்கேற்றுவதற்கு முன்பு குக்கர் வெடிகுண்டுடன் போட்டோ எடுத்திருக்கிறான். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.