தங்களது பகுதிக்கு நல்ல ரோடு போட்டுத் தருமாறு கேட்ட இளைஞரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் பவகடாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா. இவர்தான், பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவரை அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பவகடாவில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே நேற்று நடந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, தும்கூர் மாவட்டத்தில் உள்ள நாகென்னஹள்ளி கிராமத்தில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. மேலும், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கிறது. இதுகுறித்து உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான வெங்கடரமணப்பாவிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த சூழலில், நேற்று பவகடாவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா, தனது காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் அவரிடம் பேசமுற்பட்டிருக்கிறார்கள். எனவே, ஒரு இளைஞரை மட்டும் அழைத்து விவரம் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா. அதற்கு, அந்த இளைஞரும் தங்களது கிராமத்தில் உள்ள சாலைகள் மோசமான நிலையில் உள்ளதை எடுத்துரைத்ததோடு, தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்து ஆடுவது குறித்தும் தெரிவித்து, அவற்றை சரி செய்துதருமாறு வலியுறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா, அந்த இளைஞர்களை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். மேலும், அவரை சிறையில் அடைப்பதாகவும் சொல்லி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் காணொளிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த இளைஞரை எம்.எல்.ஏ. அறைவதும், பின்னர் அவருடன் வந்தவர்கள் அந்த இளைஞர்களை அங்கிருந்து வெளியேற்றுவதும் தெள்ளத்தெளிவாக பதிவாகி இருக்கிறது. எம்.எல்.ஏ.வின் இத்தகைய நடவடிக்கையால் மற்ற இளைஞர்கள் திகைத்துப்போய் நின்றிருக்கிறார்கள். இந்த வீடியோ வைரலானதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் அடாவடித்தனம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதேசமயம், அந்த இளைஞர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதால்தான் தான் தாக்கியதாகக் கூறி மக்களை திசைதிருப்பி விட்டிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா. மேலும், அந்த இளைஞர் மனவளர்ச்சி குன்றியவர் என்றும் அபாண்டமாகப் பழிபோட்டிருக்கிறார்.
இதையடுத்து, மேற்படி கிராமத்தில் உள்ள சாலைகளின் நிலை குறித்து எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, “எல்லா ரோடுகளும் நல்ல நிலையில் உள்ளதா? அவற்றையெல்லாம் ஒரே இரவில் சரி செய்ய முடியுமா? சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கப்பட்டு அடுத்த வாரம் பணிகள் தொடங்கப்படும். தற்போதுதான் நிதி ஒதுக்கி இருக்கிறது அரசு. விரைவில் வேலையை முடிப்போம்” என்று கூறியிருக்கிறார். அதேசமயம், இச்சம்பவத்திற்காக அந்த இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.