கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இட ஒதுக்கீட்டை, அம்மாநில அரசு ரத்து செய்திருக்கிறது. அதற்கு பதிலாக பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, “லிங்காயத், ஒக்கலிகர்கள் உள்பட பல்வேறு சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை வழங்கி இருக்கிறது. இதனடிப்படையில், இட ஒதுக்கீட்டு பட்டியலில் ஒக்கலிகர் சமூகத்திற்கு 2சி அந்தஸ்தும், லிங்காயத் சமூகத்திற்கு 2டி அந்தஸ்தும் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், ஒக்கலிகர்களுக்கு 4 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு 6 சதவீதமாகவும், லிங்காயத் சமூகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இட ஒதுக்கீடு 7 சதவீதமாவும் உயர்த்தி வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தலித் சமூகத்தி்ற்கு வழங்கப்பட்டு வரும் 17 சதவீத இடஒதுக்கீட்டில், சிறிய சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, அச்சமூகத்தில் வலதுசாரி சமூகங்களுக்கு 5½ சதவீதமும், இடதுசாரி சமூகங்களுக்கு 6 சதவீதமும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 5½ சதவீதம் அச்சமூகத்தின் பிரதான பிரிவுகளுக்கு கிடைக்கும்.
அதேசமயம், 2பி அந்தஸ்திலுள்ள மத சிறுபான்மையினருக்கான (முஸ்லீம்) தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக அச்சமூகத்தினர் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு (இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவார்கள். இதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது. இதனால் முஸ்லீம் மக்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். 2ஏ அந்தஸ்திலுள்ள 15 சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை” என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றிருக்கிறார். கர்நாடகாவில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசிய அமித்ஷா, “காங்கிரஸ் கட்சி தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு புதிய உள் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி பட்டியல் ஜாதியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்கி இருக்கிறது. சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லாது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.