கர்நாடகாவில் சிகிச்சை மறுக்கப்பட்டதால், தமிழகத்தைச் சேர்ந்த பெண் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்துக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கஸ்தூரி என்கிற பெண், தனது கணவருடன் பிழைப்புத் தேடி கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு வந்திருக்கிறார். அங்கு வேலை செய்து வந்த நிலையில், சமீபத்தில் அவரது கணவர் உயிரிழந்து விட்டார். இதனால், பெங்களூருவிலிருந்து குடிபெயர்ந்து தும்மகூருவுக்கு சென்றிருக்கிறார். இந்த சூழலில், கர்ப்பிணியான கஸ்தூரிக்கு கடந்த புதன்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. எனவே, பக்கத்து வீட்டில் வசிக்கும் சரோஜம்மா என்கிற பெண்ணின் உதவியோடு, தும்மகூரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு பணியிலிருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள், ஆதார் அல்லது கர்ப்பிணி அடையாள அட்டை இருந்தால்தான் ஆஸ்பத்திரியில் சேர்க்க முடியும். இல்லையென்றால் அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு வசதி இல்லாததால், கஸ்தூரியை மீண்டும் வீட்டிற்கே அழைத்து வந்திருக்கிறார் சரோஜம்மா.
இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் கஸ்தூரிக்கு வீட்டிலேயே பிரசவம் நிகழ்ந்து, இரட்டை ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், தாயும், இரு பச்சிளம் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிஸ உள்ளூர் மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோல், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் கடும் விமர்சனத்தை முன்வைத்தன. இதன் தொடர்ச்சியாக, கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்திவிட்டு, டூட்டி டாக்டர் உஷா மற்றும் 3 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதோடு, துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தாயும், இரு குழந்தைகளும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடக மாநில அரசுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்த சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அண்ணாலை தனது ட்விட்டர் பதிவில், “தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மூன்று உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் நிலையில், நடந்த தவறை மறைக்காமல் சுட்டிக்காட்டி, நீதி கேட்டிருக்கும் அண்ணாமலையின் இந்த செயல், அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.