கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டிகளின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில், பாரத பிரதமர் மோடி, கடந்த இரு நாட்களாக கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி, அம்மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டம் அன்கோலாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் மோடி. அப்போது, ஹலாக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சுக்ரி பொம்மு கவுடா மற்றும் துளசி கவுடா ஆகியோரை சந்தித்தார்.
அப்போது, இரு மூதாட்டிகளும் பிரதமர் மோடியின் காலில் விழ முற்பட்டனர். இதை தடுத்த மோடி, அம்மா நான்தான் உங்கள் கால்களில் விழ வேண்டும் என்று கூறி, மூதாட்டிகளின் கால்களில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். இவர்களில் 78 வயதாகும் துளசி கவுடாவின் சுற்றுச்சூழல் சேவையை பாராட்டி 2021-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அதேபோல, 81 வயதாகும் சுக்ரி பொம்மு கவுடாவுக்கு நாட்டுப்புற இசையில் பங்களிப்பை பாராட்டி 2017-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.