சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தமிழக பாஜக
சார்பாகப் போட்டியிடும் திருமதி.கார்த்தியாயினி அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
விசிக என்றால், விழுப்புரம், சிதம்பரம் கட்சி. சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் திரு.திருமாவளவன் அவர்கள், தன் சுயநலனுக்காக, அரசியலில் என்னென்ன தவறுகள் எல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்து கொண்டிருப்பவர். அவரை வெற்றியடையச் செய்த சிதம்பரம் தொகுதி மக்களுக்கு, தேசிய அளவில் தலைகுனிவைத்தான் ஏற்படுத்தியுள்ளார்.
பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் என்று நினைக்கிறோம். ஆனால் திருமாவளவனோ, ஒரு தரப்பினரின் மதநம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகத் தொடர்ந்து பேசி வருகிறார்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசில், 76 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் பெண்கள். 12 அமைச்சர்கள், பட்டியல் சமூகத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள். 27 அமைச்சர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சகோதர சகோதரிகள். அதேபோல, மத்தியில் முதன்முதலாக அமைச்சர் பதவி கிடைத்தபோது, அதனைப் பட்டியல் சமூகத்திற்குக் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால், திரு.திருமாவளவன் அவர்களால், திமுக கூட்டணியில் ஒரு பொதுத் தொகுதியைக் கூடப் பெறமுடியவில்லை. எது உண்மையான சமூக நீதி?
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கும் சம்பளத்தை 174 ரூபாயில் இருந்து 319 ரூபாயாக உயர்த்தியுள்ளது. நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், வலிமையான தலைவராக இருக்கிறார். ஆனால் திமுக, விசிக காங்கிரஸ் கட்சிகளின் இந்தி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்று யாரும் இல்லை.
திமுக கூட்டணி கட்சிகளை போல இதுவரை தமிழக அரசியலில் யாரும் பெண்களை இந்த அளவுக்கு இழிவுபடுத்தியதில்லை. அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது வெறும் 30 % பெண்களுக்கு மட்டுமே கொடுக்கின்றனர். அதுவும் 100% பெண்கள் பலன்பெற்று வந்த, தாலிக்கு தங்கம் திட்டம், மாணவிகளுக்கு ஸ்கூட்டி, மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை ரத்து செய்து ஏமாற்றியிருக்கிறார்கள். கல்வி கடன் ரத்து, நகை கடன் ரத்து போன்ற தேர்தல் அறிக்கையில் கூறிய எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் மது வேண்டாம் என்று மருத்துவர் ஐயா அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மது விற்பனை வருமானம் ரூ.33,000 கோடியில் இருந்து ரூ.55 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுதான் இவர்கள் உருவாக்கிய நம்பர் 1 தமிழகம்.
அக்கா திருமதி.கார்த்தியாயினி அவர்கள், சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றதும், சிதம்பரம் தொகுதி மக்கள் அனைவரையும், அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வேன் என்று உறுதியளித்துள்ளார். வரும் ஏப்ரல் 19 தேர்தல் அன்று, சிதம்பரம் தொகுதி மக்கள் அனைவரும், கட்சி வேறுபாடின்றி, தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வேலூர் மாநகர மேயராகத் திறம்படப் பணியாற்றிய அக்கா திருமதி.கார்த்தியாயினி அவர்கள், போலி சமூக நீதி பேசும் திரு.திருமாவளவன் அவர்களை, நிச்சயம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பார் என்பது உறுதி.