பேனா நினைவுச் சின்னம் தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம், கூச்சல், குழப்பம், கோஷம், மைக் ஆஃப், ரகளை என கருத்தே சொல்ல விடாமல் நடந்து முடிந்திருக்கிறது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக, மெரினா கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் ஸ்டாலின் அறிவித்திருந்தார். எனினும், இது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெறுவது அவசியம். எனவே, தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் தேசிய கடலோர மண்டல ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தும்படி கடலோர மண்டல ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக்கேட்புக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், மீனவ அமைப்புகள், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். காலை 10:30 மணிக்கு தொடங்கிய கூட்டம், மதியம் 1:30 வரை நடந்தது. கூட்டம் தொடங்கும்போதே கருத்துக் கூற விரும்புபவர்களின் பட்டியல் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த அருள் முருகானந்தம், இத்திட்டத்துக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதனால், அவரை மேடையிலிருந்து இறங்கும்படி தி.மு.க.வினர் கூச்சலிட்டனர்.
இதேபோல, பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிராக பேசியவர்களுக்கு எதிராக தி.மு.க. ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் கூட்டத்தில் கூச்சலும், குழப்பமுமாக ஒரே களேபரமாக காட்சியளித்தது. கூட்டத்தில் பேசவந்த சமூகச் செயற்பாட்டாளரான முகிலன், இத்திட்ட அறிக்கையில் தி.மு.க. ஆட்சியில் அமர்வதற்கு முன்பாகவே, ஆய்வு நடத்தப்பட்டதாக தகவல் இருப்பது குறித்துச் சொன்னார். அப்போது, 382 பக்கங்கள் கொண்ட திட்ட அறிக்கையை தி.மு.க. அரசு வெளியிட்டிருந்தது. ஆனால், அதை ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டது. பல நாள்களாக போராடி அரசிடமிருந்து தமிழில் வாங்கியதாகக் கூறினார்.
உடனே, அவர் பேசுவது தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பேச முயற்சித்ததால், அவரை பேசவிடாமல் மைக் ஆஃப் செய்யப்பட்டது. இதனால், அவர் மேடையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். எனவே, அவரை போலீஸார் வெளியேற்றினர். தொடர்ந்து, மே 17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன் என சிலரும் காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னையை காரணம் காட்டி பேனா நினைவுச்சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில்தான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடை ஏறினார். உடனே, அவரை பார்த்து தி.மு.க.வினர் கூச்சலிட்டனர். அப்போது, அந்த பயம் இருக்கணும் என்றபடியே, தி.மு.க. ஆதரவாளர்களை பார்த்துச் சொல்லி விட்டு, பேச்சைத் தொடர்ந்த சீமான், பேனா அமைப்பதைக் கடுமையாக எதிர்த்தார். உடனே, தி.மு.க.வினர் மீண்டும் கூச்சலிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த சீமான், மெரினா கடற்கரையில் புதைக்கவிட்டதே தப்பு, இதுல பேனா சிலை வேறையா? சிலை அமைத்துப் பார்… ஒரு நாள் வந்து உடைக்கிறேன் என்று ஆவேசமானார்.
சீமானின் இப்பேச்சு தி.மு.க.வினரை உசுப்பேற்றி விட்டது. உடனே மேடையேறிய பசும்பொன் பாண்டியன், முடிந்தால் உடைத்துப் பார் என்று சீமானுக்கு சவால் விட்டார். இப்படியாக கூட்டத்தில் பேனா நினைவுச்சின்னத்துக்கு எதிராக பேசியவர்களை பேசவிடாமல் தடுத்து வந்தனர் தி.மு.க.வினர். ஆக மொத்தத்தில் கருத்துக்கேட்புக் கூட்டம் பொதுமக்களை கருத்தே சொல்ல விடாமல் முடித்து வைக்கப்பட்டது. ஆகவே, இக்கூட்டத்தை ரத்துசெய்யக் கோரி மாவட்ட கலெக்டரிடம் எழுதிக் கொடுத்து விட்ட வந்திருக்கும் சீமான் கட்சியினர், நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.