கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தெருவுக்கு உதயநிதி பெயரை சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வினர் துளிகூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதேசமயம், பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என ஏதாவது ஒரு மூளையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல, கான்ட்ராக்ட் உள்ளிட்ட விவகாரங்களிலும் தி.மு.க.வினர் கல்லாகட்டி வருகிறார்கள். மொத்தத்தில் தி.மு.க. ஆட்சி கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் என்று போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலினோ, இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல், தனது வாரிசை வளர்த்து விடுவதிலேயே குறியாக இருக்கிறார்.
உதாரணமாக, 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது மகன் உதயநிதிக்கு சீட் வழங்கி எம்.எல்.ஏ.வாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு முதலில் கட்சியில் ஏதாவது பதவியில் இருக்க வேண்டுமல்லவா? எனவே, இளைஞர் அணிச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதனை ராஜினாமா செய்ய வைத்து, அந்தப் பதவியை உதயநிதிக்கு கொடுத்தார்கள். பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார்கள்.
எம்.எல்.ஏ.வான ஒன்றரை ஆண்டுகளிலேயே, கடந்த சில தினங்களுக்கு முன்பு உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தி.மு.க. பைலா படி, 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களுக்குத்தான் அமைச்சர் பதவி வழங்க முடியும். ஆனால், தனது மகன் என்பதற்காக இந்த விதிமுறைகளை எல்லாம் மீறி, அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின் என்கிற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இது கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை முணுமுணுக்க வைத்திருக்கிறது.
இந்த நிலையில்தான், கரூர் மாநகராட்சியில் ஒரு வார்டிலுள்ள ஒட்டுமொத்த தெருவுக்கும் உதயநிதி பெயரை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கரூர் மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட 36-வது வார்டு கவுன்சிலர் வசுமதி, “மாநகராட்சி 36-வது வார்டில் மணக்களம் தெரு என்று பதிவேட்டில் இருக்கிறது. இத்தெருவுக்கு உதயநிதி முதல்தெரு, இரண்டாவது தெரு, மூன்றாவது தெரு என்று பெயர் மாற்ற வேண்டும்” என்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இத்தீர்மானத்துக்கு மாநகராட்சியிலுள்ள தி.மு.க.வைச் சேர்ந்த 46 கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் துளியளவு கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதனால், அத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம்தான் தற்போது கரூர் மாநகர மக்கள் மத்தியில் நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருக்கிறது. கரூர் மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள், தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விலைபோய் விட்டார்கள். இதனால்தான் அத்தீர்மானத்துக்கு அ.தி.மு.க.வினர் பெயரளவில்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
கரூர் மாநகராட்சியிலுள்ள ஒரு வார்டுக்கு உதயநிதி பெயர் வைக்கும் அளவுக்கு அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா? ஒரு தெருவுக்கு பெயர் வைக்க வேண்டுமானால், அவர் பாரதத்தின் பிரதமராகவோ அல்லது மாநிலத்தின் முதல்வராகவோ இருந்திருக்க வேண்டும். அல்லது சுதந்திரப் போராட்ட வீரராகவோ, தியாகவோ இருக்க வேண்டும். அட்லீஸ்ட் ஒரு அரசியல் தலைவராகவாவது இருக்க வேண்டும். ஆனால், இதில் எந்த தகுதியுமே இல்லாத உதயநிதியின் பெயரை, ஒரு தெருவுக்கு ஏன் சூட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுதான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.