கரூரில் வாழைத்தோட்டத்திற்குள் குட்கா குடோன் அமைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்த தி.மு..க. நிர்வாகியை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் ஜாபருல்லா. இவர், தி.மு.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். குளித்தலை நகர்மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்த சூழலில், குளித்தலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸார் பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர்களிடம் ஏராளமான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் ஆசாத், சாதிக் அலி என்பதும், மேற்படி புகையிலைப் பொருட்கள், தி.மு.க. நிர்வாகி ஜாபருல்லாவின் குடோனில் இருந்து விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் அழைத்துக் கொண்டு குட்கா குடோனுக்குச் சென்ற போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி. காரணம், வாழைத் தோட்டத்திற்கு நடுவில் குட்கா குடோன் அமைந்திருந்ததுதான். இங்கிருந்து ஆசாத், சாதிக் அலி ஆகியோர் மூலம் ரகசியமாக கடைகளுக்கு சப்ளை செய்து வந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, தி.மு.க. நிர்வாகி சாதிக் அலியை போலீஸார் கைது செய்யச் சென்றபோது, அவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அவரை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர். அதேசமயம், இன்னொரு தகவலும் உலா வருகிறது. மேற்கண்ட தி.மு.க. நிர்வாகி, ஆளும்கட்சியில் செல்வாக்கானவர் என்றும், மாவட்ட அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இதனால், அவரை போலீஸார் கைது செய்யவில்லை என்கிற தகவலும் உலா வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. ஆளும்கட்சியினர்தான் இந்த குட்கா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க.வைச் சேர்ந்த சிலர், குட்கா விற்பனையில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழகத்தில் குட்கா விற்பனை தொடர்பாக, கவர்னரை சந்தித்து புகார் மனு கொடுத்து விட்டு வந்தார், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி. இந்த சூழலில், தி.மு.க. சார்பில் நெல்லையில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பா.ஜ.க.வினர்தான் குட்கா விற்பனையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், உண்மையில் குட்கா விற்பனை செய்வது யார் என்பது இச்சம்பவத்தின் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.