செந்தில்பாலாஜி ஊழல்வாதி என்று சொல்லி, 151 புகார்களை வாசித்து ஸ்டாலின், இன்று அவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவியை கொடுத்திருக்கிறார். அப்படியானால் தி.மு.க.வுக்கு வந்ததும் அவர் புனிதராகி விட்டாரா? என்று மின்வாரிய அதிகாரி ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூரைச் சேர்ந்த செந்தில்பாலாஜி, 2011 அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் பணம் வசூலித்த சர்ச்சையில் சிக்கினார். இதனால், அவரது அமைச்சர் பதவியை பறித்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. 2016 தேர்தலில் வெற்றி பெற்றாலும், செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார், கிடைக்கவில்லை. இந்த சூழலில், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்டனர். இதன் பிறகு, தினகரன் புதிய கட்சியை தொடங்கினார். உடனே, தினகரனின் அ.ம.மு.க. கட்சிக்குச் சென்று விட்டார் செந்தில்பாலாஜி.
இதனிடையே, 2016 சட்டமன்றத் தேர்தலின்போது கரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், செந்தில்பாலாஜி மீது 151 ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலில் ஜெயலுக்கு அனுப்பப்படுபவர் செந்தில்பாலாஜிதான் என்று அறைகூவல் விடுத்தார். ஆனால், தி.மு.க. ஆட்சியும் அமைக்கவில்லை, செந்தில்பாலாஜி ஜெயிலுக்கும் போகவில்லை என்பது வேறுகதை. இந்த சூழலில், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திடீரென தினகரன் கட்சியிலிருந்து தி.மு.க.வுக்கு தாவினார் செந்தில்பாலாஜி. பின்னர், அக்கட்சியில் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இதனால், கரூர் தி.மு.க.வினர் கொந்தளிப்படைந்தது எல்லாம் பழைய கதை.
இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு கரூர் தொகுதியில் சீட் வழங்கியதோடு, வெற்றிபெற்ற அவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவியையும் வழங்கி இருக்கிறார் தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின். இதன் பிறகு, தற்போது மின்சாரக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ், பென்சன் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று மின்சார வாரிய ஊழியர்கள் மத்தியிலும் குமுறல் இருந்து வருகிறது.
இந்த சூழலில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் நடந்த இந்த போராட்டத்தில் பேசிய மின்வாரிய ஊழியர் ஒருவர்தான், அன்றைக்கு ஊழல்வாதியாக இருந்து செந்தல்பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்ததும் புனிதராகி விட்டாரா? என்று கேள்வி எழுப்பும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசும் அந்த ஊழியர், கரூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலின், செந்தில்பாலாஜி மீது 151 ஊழல் புகார்களை வாசித்ததோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலில் ஜெயிலுக்கு அனுப்பப்படுபவர் செந்தில்பாலாஜிதான் என்றார். ஆனால், அவர் தி.மு.க.வில் சேர்ந்ததும் புனிதராகி விட்டார் போல. அவருக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவியைக் கொடுத்திருக்கிறார். ஒரு ஊழல்வாதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், அத்துறை எப்படி உருப்படும்.
மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 6 ரூபாய்க்கு வாங்கி கொள்ளையடிப்பதாக குற்றம்சாட்டினீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2 ரூபாய்க்கு வாங்கி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை. அதேபோல, நீட்டை ரத்து செய்வோம் என்று சொன்னீர்கள். நீட்டை ரத்து செய்தீர்களா? மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார ரீடிங் எடுப்பதால், மின் கட்டணம் அதிகம் வந்து, மக்கள் சிரமப்படுகிறார்கள். ஆகவே, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மாதம் ஒருமுறை ரீடிங் எடுக்கப்படும் என்றீர்கள், செய்தீர்களா? அதாவது, எதிர்க்கட்சியாக நீங்கள் இருக்கும்போது ஒன்று பேசுவதும், ஆளும்கட்சியாக வந்த பிறகு வேறு மாதிரி பேசுவதும் வாடிக்கையாகப் போய்விட்டது. இது இன்று நேற்றா நடக்கிறது. காலம் காலமாக இதுதானே நடக்கிறது” என்று வெளுத்து வாங்கி இருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பலரும் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.