தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் உறவானது இந்தியாவின் பாரம்பரியமிக்க இரு கலாச்சாரங்களுக்கிடையே தொன்று தொட்டு வரும் ஒரு பந்தமாகும். நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும், காசி தமிழ் சங்கமத்தின் நோக்கமாகும்.
தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது பல்வேறு சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. ஆன்மிக கவிஞர் குமரகுருபரர் வாரணாசிக்கு சென்று அங்கேயே அவரது சமாதி அமைந்திருப்பது, மகாகவி பாரதியார் தனது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் காசிக்கு வந்து தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தது, 1819 ஆம் ஆண்டிலேயே நகரத்தார் சமூகத்தினரின் சத்திரம் ஒன்று அங்கு கட்டப்பட்டிருப்பது, தமிழகத்தில் வணங்கப்படும் தெய்வமான விசாலாட்சி அம்மனுக்கு அங்கு கோவில் அமைந்திருப்பது போன்ற பல்வேறு சான்றுகள் தமிழகத்திற்கும், காசிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விளக்கும் விதமாக அமைந்துள்ளன.
இந்த தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கல்வி அமைச்சகத்தால் 17 டிசம்பர் 2023 முதல் 30 டிசம்பர் 2023 வரை காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது கட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் 2-ம் கட்ட தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்ச்சிக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்டோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள், வாரணாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணமாகச் சென்றனர், அப்போது அவர்கள் பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி உள்ளிட்ட வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆழமான அனுபவத்தைப் பெற்றனர். அவர்கள் கருத்தரங்குகளில் பங்கேற்றனர், கண்காட்சிகளைப் பார்வையிட்டனர், உள்ளூர் உணவு வகைகளை ருசித்தனர், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர், வரலாற்று மற்றும் சுற்றுலா ஆர்வமுள்ள இடங்களைப் பார்வையிட்டனர். கல்வி அமைச்சகம் இந்த திட்டத்தை வழிநடத்திய போதிலும், பங்கேற்பு அமைச்சகங்கள் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசின் பங்கு அதை சாத்தியமாக்குவதில் ஒருங்கிணைந்தது.
கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தை மத்திய அரசு முதன்முறையாக நடத்தியது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் மேலும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது அதுபோலவே காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்விலும் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார்.
இந்த முறையும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் முக்கிய ஆளுமைகள் பிரயாக்ராஜ், அயோத்தி, வாரணாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் சிறப்புரையாற்றுவார்கள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் போன்றவற்றையும் அவர்கள் கண்டுகளித்து ஆழமான அனுபவத்தை பெறுவார்கள்.
காசி தமிழ்ச் சங்கமம் 2.0 விற்கு தமிழ்நாட்டிலிருந்து முதல் ரயில் டிசம்பர் 15, 2023 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோரால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த முதல் ரயிலில் 216 பேர் வாரணாசிக்கு பயணிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மெலும் பலர் வாரணாசிக்கு செல்ல இருக்கிறார்கள்.