காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு காசி தமிழ் சங்கமத்தின் அனுபவப் பகிர்வு என்ற தலைப்பில் தமிழக ஆளுநர் மாளிகை போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
கலாச்சார மையங்களாக திகழும் வாராணசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ் சங்கமத்தின் முதல்கட்ட நிகழ்வு கடந்த ஆண்டு தொடங்கியது. இது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 17 தொடங்கிய காசி தமிழ் சங்கமம் 2.0 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் தமிழகத்தை சேர்ந்த ஏழு குழுக்கள் பங்கேற்கின்றனர் அவர்களுக்கு, ‘2023 – 2.0 காசி தமிழ் சங்கமத்தின் அனுபவப் பகிர்வு’ என்ற தலைப்பில், போட்டி ஒன்றை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி போட்டி அறிவித்துள்ளார்.
இப்போட்டியில் பங்கேற்போர், தங்கள் காசி தமிழ் சங்கமம் அனுபவங்களை, தமிழ் அல்லது ஆங்கிலத்தில், 1,000 வார்த்தைகளுக்கு குறையாமல், தட்டச்சு செய்தோ அல்லது கையால் தெளிவாக எழுதியோ, அனுப்பி வைக்க வேண்டும்.
கட்டுரையை, ‘கவர்னரின் துணை செயலர், பல்கலைகள், கவர்னர் செயலகம், கவர்னர் மாளிகை, கிண்டி, சென்னை – 22’ என்ற முகவரிக்கு அல்லது, [email protected] என்ற இ – மெயில் முகவரிக்கு, ஜன., 16க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பகிர்வுகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று சிறந்த கட்டுரைகள் என்ற முறையில், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதனை ஆளுநர் ஆர்என்.ரவி வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.