ஜம்மு காஷ்மீரில் 32 வருடங்களுக்குப் பிறகு புத்தாண்டையும், நவராத்திரி விழாவையும் ஒரு சேரக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள் ஹிந்துக்கள். இவ்விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், காஷ்மீரி ஹிந்து பண்டிட்களை மீள் குடியேற்றம் செய்வதற்கான தருணம் வந்து விட்டது என கூறியிருப்பது, அம்மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை பயங்கரவாதம் தலைவிரித்து ஆடியது. இந்த காலக்கட்டத்தில் ஹிந்துப் பண்டிட்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஒன்று மதம் மாற வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும் என்று சொல்லி சித்ரவதைப் படுத்தப்பட்டனர். குறிப்பாக, 1990-ம் ஆண்டு ஆரம்பமே ஹிந்துக்களுக்கு மிகவும் மோசமானதாக இருந்தது. ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை அரங்கேற்றி விட்டார்கள் இஸ்லாமிய பயங்கர வாதிகளும், அடிப்படை வாதிகளும். இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே தங்களது சொத்துக்கள், உடைமைகள், வீடுகள் என அனைத்தையும் இழந்துவிட்டு, அகதிகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தஞ்சமடைந்தனர் ஹிந்து பண்டிட்கள். ஆனால், அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லாததால், இந்த விஷயமும் பெரிய அளவில் வெளியே தெரியாமல் போய்விட்டது.
அதேசமயம், மத்தியில் ஆட்சியில் இருந்த வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அக்கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கிக் கொண்டது. இதன் பிறகு, 1996-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த வாஜ்பாஜ் தலைமையிலான பா.ஜ.க. அரசு, பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை மேற்கொண்டது. இதனால், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறையத் தொடங்கியது. எனினும், ஹிந்து பண்டிட்களை அங்கு மீள் குடியேற்றம் செய்ய முடியவில்லை. இந்த நிலையில்தான், 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதோடு, மாநிலமும் காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. மேலும், அங்கு பயங்கரவாதத்தை முற்றிலுமாக தடுக்க, ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, பயங்கரவாதமும் குறையத் தொடங்கியது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் ஹிந்து பண்டிட்களை மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில்தான், இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி, காஷ்மீரில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து, தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்கிற திரைப்படத்தை எடுத்து கடந்த மார்ச் 11-ம் தேதி வெளியிட்டார். இப்படம் வெளியான பிறகுதான், ஹிந்து பண்டிட்களுக்கு காஷ்மீரில் நடந்த சித்ரவதைகள் வெளியுலகுக்குத் தெரியவந்தது. இதனால், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஹிந்து பண்டிட்கள் சற்றே தைரியம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், காஷ்மீரில் வசிக்கும் ஹிந்து பண்டிட்கள், 32 வருடங்களுக்குப் பிறகு, தற்போது புத்தாண்டும், நவராத்தி விழாவும் கொண்டாடி இருக்கிறார்கள்.
இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் பேசுகையில், 1990-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து அகதிகளைப் போல வாழ்ந்து வரும் காஷ்மீர் பண்டிட்களை, மீள் குடியேற்றம் செய்வற்கான தருணம் வந்து விட்டது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை சுட்டிக்காட்டி இருக்கும் அவர், அப்படம் உண்மையை உலகுக்கு காட்டி இருக்கிறது என்றும் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். மோகன் பாகவத்தின் இந்த வார்த்தைகளால், ஹிந்து பண்டிட்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.