கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
“மங்கையராய் பிறப்பதற்கே, நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”..
பெண் குழந்தைகளை, கருவிலேயே கலைக்கும் காலத்தில், பெண்களின் அருமையும் பெருமையும் கூறுவதாக, இந்த வாக்கியம் அமைந்துள்ளது. அதுமட்டுமன்று,
ஓடும் உதிரத்தில், வடித்து ஒழுகும் கண்ணீரில்,
தேடிப் பார்த்தாலும், சாதி தெரிவதுண்டோ…
என சமத்துவ பாதை பேசி, மக்களிடம் எழுச்சியையும், விடுதலை வேட்கையையும் ஏற்படுத்தினார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
கவிதை எழுதுவதில் பாரதியாருக்கு நிகராகவும்,விடுதலை வேட்கையில் காந்தியடிகளுக்கு நிகரான பொறுமையும், அமைதியும் கொண்டவர். அனைவரையும் அன்பாக அரவணைத்து செல்வதில், நேருவுக்கு நிகரானவர். அடுத்த தலைமுறை வளர்வதற்கு சிறந்த ஒரு போர் வாள், கல்வி ஒன்றே என மனதில் கொண்டு, அவற்றை சாத்தியமாக்கி காட்டியதுடன், நிறைய ஆசிரியர்களை உருவாக்கினார். நல்ல போதனை உள்ள துணையுடன், குழந்தை செல்வங்களுக்கு அறிவும், ஆரோக்கியமும், சுதந்திர கருத்துக்களையும், சுதந்திர தாகத்தையும் உண்டாக்க செய்தவர். சுதந்திர இந்தியாவை, கண்ணாரக் கண்டு மனதார வாழ்த்தி, நலமுடன் வாழ்க என, தம் பிள்ளைகளை எல்லாம் வாழ்த்தி, அருள செய்தவர்.
கவிமணி பாடல்களின் தொகுப்பு முறை குழந்தை பாடல்கள், இயற்கை பாடல்கள், பக்தி பாடல்கள், இலக்கியப் பாடல்கள், வரலாற்று ஆய்வு கவிதைகள், வாழ்வியல் போராட்டக் கவிதைகள், சமூக பாடல்கள், தேசியப் பாடல்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலை கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என்று பரந்து விரிந்து தன் படைப்புகளை, தன் குழந்தைகளுக்காக வாரி வழங்கிய, மாபெரும் தந்தை கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை.
தமிழக மக்களை எல்லாம், தன் பிள்ளைகளாகவே நினைத்து, பாவித்து வளர்ப்பார் என்பதால், இறைவன் அவருக்கு குழந்தைப் பேறு என்பதே இல்லாமல் செய்தார். தனது அக்காள் மகனான சிவதாணுவை, தன் மகனாக வளர்த்தார். 1901 ஆம் ஆண்டு 24 வயதில், புத்தேரி ஊரில் உமையாள் என்பவரை மணந்தார்.
27 ஜூலை, 1876 – சிவதாணு மற்றும் ஆதிலட்சுமி அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயிலில், சுசிந்திரத்தில்இருந்து 4 மைல் தொலைவில் உள்ள, “தேரூர்” என்னும் சிற்றூரில், பிறந்தார். இவரின் பத்தாவது வயதில், தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பிலும் மற்றும் உற்றார் உறவினர்கள் துணையுடன் வளர்ந்தார்.
குழந்தைப் பருவம் :
• ஐந்து வயதில், தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப் பட்டார்.
• ஒன்பது வயதில், தந்தையை இழந்தார். நாகர்கோயில், கேரளத்தை சேர்ந்ததாக இருந்ததால், இவர் பள்ளிப் படிப்பு முழுவதும் மலையாள மொழியில் அமைந்திருந்தது.
• திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்க தம்பிரானிடம், தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
• கோட்டாறு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
• முதுகலைப் பட்டமும் பெற்றார்.
• திருவனந்தபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
ஆற்றிய பணிகள் :
• நாகர்கோயில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில், ஆசிரியராக பணியாற்றினார்.
• திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில், 36ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார்.
• சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில், ‘மதிப்பியல்’ உதவியாளராக பணிபுரிந்தார்.
• 1941 இல் திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தில், குழு உறுப்பினராக இருந்தார்.
இயற்றிய நூல்கள் :
• குழந்தைகளுக்காக, முதல் முதலில் பாடல்களை எழுதினார். இவர் இயற்றிய பாடல்களில், மிகவும் பிரசித்தி பெற்றது –
“தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு” என்னும் பாடல் – இன்றும் மறக்க இயலாத குழந்தை பாடலாகும்.
• முதல் நூல் – “அழகம்மை ஆசிரிய விருத்தம்”.
• 1938 – “மலரும் மாலையும்”, கவிதை நூல்.
• 1941 – “ஆசிய ஜோதி” மொழிப்பெயர்ப்பு நூல், அர்னால்டு எழுதிய லைஃப் ஆஃப் ஏஷியா.
• 1942 – “மருமக்கள் வழி மான்மியம்”, நகைச்சுவை நூல்.
• 1945 – “உமர்கயாம் பாடல்கள்”, மொழி பெயர்ப்பு நூல்.
• 1947 – “கதர் பிறந்த கதை”.
• தேசிய கீர்த்தனங்கள்.
• குழந்தைச் செல்வம்.
• கவிமணியின் உரை மணிகள்.
• காந்தர் சாலை வரலாற்று நூல்.
• தீண்டாதார் விண்ணப்பம்.
• “அப்பம் திருடின எலி”, “பசுவும் கன்றும்”, “பொம்மை கல்யாணம்” போன்றவை குழந்தைகளுக்கு மகிழ்வைத் தந்தது.
• “கம்ப ராமாயணம்”, “திலகம் நவநீத” பாட்டில், பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.
• குழந்தைகளுக்காக இவர் இயற்றிய பாடல்களில், பல தமிழக பாடப் புத்தகங்களில் பாடல்களாக இடம் பெற்றுள்ளன.
• காந்தி வழியை பின்பற்றியவர், ஆங்கிலேயருக்கு எதிராக பாடிய மிகப் பிரபலமான கவிதை வரி –
“கள்ள ரக்கா குலத்தோடு நீ
கப்பல் ஏற தாமதமேன்
வள்ளல் எங்கள் காந்தி மகான்
வாக்கு முற்றும் பவித்தனியிலே”…
விருதுகள் :
• 1954 இல் தேரூரில் நினைவு இல்லம்.
• 2005 அக்டோபரில், இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது.
பட்டங்கள் :
கவிமணி, குழந்தைக் கவிஞர், தேவி, நாஞ்சில் நாட்டு கவிஞர், தழுவல் கவிஞர், விடுதலை கவிஞர்.
இளம் பருவத்தில், கோவில் கொடை காண சென்ற இளம் புலவர், அங்கே ஆட்டினை பலி கொடுக்கும் காட்சியை கண்ட,தேவி என்னும் கவிமணிக்கு நெஞ்சம் உருகியது, அந்த உருக்கத்தில், அவர் பாடிய கவிதை மொழிகள், “கொல்லாமையை” போதித்தார்.
இராஜா சர் அண்ணாமலை செட்டியார், கவிமணிக்கு பாராட்டு விழா நடத்தியும், பொன்னாடை போர்த்தியும், பொற்கிழி அளித்தும், சிறப்பித்தார். பாராட்டை பெற்றுக் கொண்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள், பொன் முடிப்பை, தக்கார் மூலம் திருப்பி அனுப்பினார். அவருடைய மாண்பை அறிந்து வியந்தார், அண்ணாமலைச் செட்டியார். 1954 செப்டம்பர் 26 ல், இயற்கை எய்தினார்.
கவிமணியின் வளர்ப்பு மகனான சிவதாணுவின் மகன், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் குற்றாலம் அவர்கள். தனது தாத்தாவின் புகழை, இன்றும் பரப்பி வருகிறார். தம் வாழ்நாளில், பெற்ற பரிசுகள் அனைத்தையும் பணமாக்கி, திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில், தன் தாயார் பெயரில், அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். அது அவருடைய, தாய் அன்பையும், தமிழ் அன்பையும் காட்டுகிறது. ஆண்டு தோறும் தமிழில், அதிக மதிப்பெண் பெறும், B.A. பட்டதாரி மாணவர் பரிசு பெற, அதன் மூலம் ஏற்பாடு செய்தார்.
அவருடைய “வெய்யிற்கேற்ற நிழலுண்டு”, “எழுதிச் செல்லும் விதியின் கை” என்ற பாடல்கள் இரண்டை “கள்வனின் காதலி” என்ற திரைப் படத்தில் பயன் படுத்தினார்கள். படத் தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை, சிவாஜி கணேசன் மூலம், ஒரு பெரும் தொகையை, இவருக்கு அனுப்பி வைத்தார். “உங்கள் படத்துக்காக எழுதின பாடல் அல்ல, எப்போதோ எழுதினது, அதற்கு பணம் எல்லாம் வேண்டாம்” என மறுத்து விட்டார். இவரின் மொழிப் பற்றை, எழுத்தில் மட்டும் வெளிப் படுத்தவில்லை, நிலத்திலும் வெளிப் படுத்தினார். இவரின் பிறந்த ஊரான குமரி மாவட்டத்தை, கேரளத்துடன் இணைக்கும் முயற்சியை, முறியடித்தார். அதற்காக, தக்க சான்றுகளை காட்டி, அவர் நிரூபித்ததால் தான், திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகள், தாய் தமிழகத்துடன் இணைக்கப் பட்டன.
கவிமணி அவர்களை, பல ஆன்றோர் சான்றோர் வந்து, அவரது இல்லத்திலேயே, அவரை தரிசித்து சென்றனர். அவர்களில் சிலர், மா.பொ.சி., டி.கே.சி. ராஜாஜி அவர்கள், மேற்குவங்க ஆளுநராக இருந்த போது, அவர் இல்லம் தேடி சென்றார். தமிழை தேடி சென்று பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்தில், அவர் இல்லம் தேடி சென்று பார்த்தார். கலைவாணர் என்.எஸ்.கே, எம்.கே. டி. பாகவதர் என்ற பல அறிஞர்களுக்கும், செவிக்கும், வயிற்றுக்கும் பஞ்சமில்லாமல், விருந்தோம்பல் செய்து அனுப்புவதில், மிகவும் கை தேர்ந்தவர்.
தேசிக விநாயகம் பிள்ளைக்கு, “கவிமணி” என்ற பட்டத்தை, சென்னை மாநில தொழிற்சங்கத்தின் சார்பில், உமா மகேஸ்வரன் பிள்ளை அவர்கள் வழங்கினார்.
கவிதை தொகுப்பை, பல இன்னிசை வித்தகர்கள் மேடையில் பாடி வந்தார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானவர், டி.கே.எஸ் அவர்கள். அவர் நடத்தி வந்த “வட்டத் தொட்டி” அமைப்பின் மூலம், கவிமணியின் கவிதைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
நாகர்கோயில் எழுத்தாளர் மாநாடு நடந்த போது, பேரறிஞர் அண்ணாவும், கவிமணியும் கலந்து கொண்டனர்.
இவர் 1954 இல் இயற்கை எய்தினார். அக்கா மகனான சிவதாணு, அவரின் இறுதி யாத்திரைக்கு தேவையான, அனைத்து விதமான சடங்குகளையும் செய்து முடித்தார்.
கவிமணியின் வளர்ப்பு மகனான சிவதாணுவின் மகன் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் குற்றாலம் அவர்கள், கவிமணியின் புகழை இன்றும் பரப்பி வருகிறார்.
- விஜயா முரளிபதி