பந்த்தின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துக்களுக்கு, பி.எஃப்.ஐ. அமைப்பினர் 5.2 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்காவிட்டால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் சொத்தை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடுகட்டுமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறு.
பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் பி.எஃப்.ஐ. அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மாஸ் ரெய்டு நடத்தியது. இதை கண்டித்து கேரளாவில் கடந்த 23-ம் தேதி பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது பி.எஃப்.ஐ. அமைப்பு. இப்போராட்டத்தில் வன்முறை வெடித்து, அரசு பஸ்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு இடங்களில் கடைகளும் சூறையாடப்பட்டன. மேலும், ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் குண்டுவீச்சு சம்பவங்களும் நடந்தன.
இது தொடர்பாக, கேரள ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும், வேலைநிறுத்த போராட்டத்தின்போது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று போலீஸ் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், முஹம்மது ரியாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், “பந்த் தொடர்பாக மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிம் பி.எஃப்.ஐ. மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தாரை குற்றவாளியாக சேர்க்க வேண்டும். அதேபோல, பந்த்தின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களுக்கான நஷ்டஈடு முழுவதையும் பி.எஃப்.ஐ. நிர்வாகியிடமே வசூலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இது ஒருபுறம் இருக்க, பந்த்தின்போது கேரள மாநில போக்குவரத்துத்துறைக்குச் சொந்தமான ஏராளமான பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வகையில், மாநில அரசுக்கு மொத்தம் 5.20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த டிவிஷன் பெஞ்ச், பந்த்தை அறிவித்தவர் 5.20 கோடி ரூபாயை நஷ்டஈடாக செலுத்த வேண்டும். அத்தொகையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம் 2 வாரங்களில் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தத் தவறினால், வருவாய் மீட்பு சட்டத்தின்படி பி.எஃப்.ஐ. நிர்வாகிகளின் சொத்துகளை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதோடு, வன்முறை காரணமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு முன்பு, அவர்கள் சேதத்துக்கான தொகையை செலுத்தியிருப்பதை உறுதிபடுத்தும்படியும் மாஜிஸ்திரேட் கோர்ட் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.