கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசிர் பூட்டோவின் போட்டோவை அச்சிட்டிருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, எதிரிகள் வெளியில் இல்லை, நாட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. கடுமையாக விமர்சித்திருக்கிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் பினராயி விஜயன் முதல்வராக இருக்கிறார். இந்த சூழலில், இக்கட்சியின் மகளிர் பிரிவான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், தேசிய மாநாட்டை நடத்தவிருக்கிறது. இதையொட்டி, மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் உட்பட மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த போஸ்டரில்தான், கொல்லப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் போட்டோ அச்சிடப்பட்டிருக்கிறது. அந்த போஸ்டர்களில் “பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் மற்றும் ஹார்வர்டு உட்பட 9 பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றவர்” என்று குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும், தியாகிகள் சதுக்கத்திற்கு பெனாசிர் பூட்டோ சதுக்கம் என்று பெயரிட்டிருக்கின்றனர்.
இந்த விவகாரம்தான் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சந்தீப் வச்சஸ்பதி கூறுகையில், “பாரதத்தின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் மறைந்த மூத்த சி.பி.எம். தலைவரும், மாநிலத்தின் முதல் கம்யூனிஸ்ட் பெண் அமைச்சருமான கே.ஆர்.கவுரி அம்மா ஆகியோர் கேரள கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்களுக்கு தெரியவில்லை போல. அது சரி, நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்த ஒரு கட்சியிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்” என்று கேள்வி எழுப்பியவர், “சி.பி.எம். மகளிர் பிரிவான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்துக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கும் உள்ள தொடர்பை பற்றி நான் கேட்கவில்லை. விரோதியான அண்டை வீட்டாரைக்கூட தந்தையாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள் என்கிற மலையாள பழமொழியை நினைபடுத்த விரும்புகிறேன்.
பாரதத்தை முடிக்க எந்தக் கல்லையும் விட்டுவைக்காத எதிரி நாட்டின் பிரதமர் பெனாசிர். அப்படிப்பட்டவரை மதித்து வழிபடுபவர்கள், இந்த நாட்டுக்கு எதிரிகள். நமது சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் செய்தவர்களின் சந்ததியினரிடம் நாங்கள் அதிகம் எதிர்பார்க்கவில்லை. நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த மக்கள் எந்த நேரத்திலும் இந்த நாட்டை காட்டிக் கொடுக்கலாம். சீனாவும் பாகிஸ்தானும் எதிரிகள் அல்ல. இங்கு சகல வசதிகளையும், சௌகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு நமக்கே துரோகமிழைக்கும் இவர்கள்தான் நாட்டின் இயற்கை எதிரிகள். இதற்கு சி.பி.எம். மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு, மாநிலம் முழுவதும் உள்ள போஸ்டர்களை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், பெனாசிர் யார் என்பதை சி.பி.எம். கட்சியும், அதன் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும் தெளிவுபடுத்த வேண்டும்.
நமது தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த லட்சக்கணக்கான பெண் விடுதலை போராளிகள் நம்மிடம் உள்ளனர். அப்படி இருக்க சி.பி.எம். கட்சிக்கு பெனாசிர் ஏன் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மேலாக இருக்கிறார்?அவர்களை பின்பற்றுபவர்களை ஊக்குவிக்க பெனாசிர் தேவையா? சிறுபான்மையினரை திருப்திப்படுத்த கம்யூனிஸ்டுகள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளனர் என்பதை இந்த சமீபத்திய அத்தியாயம் நிரூபிக்கிறது. வாக்குதான் இவர்களுக்கு எல்லாம். குவைத் ஈராக் படையெடுப்பிற்கு பிறகு 1991-ல் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது, ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் தலைமையிலான சி.பி.எம்., அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேன் பெயரில் வாக்கு கேட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இன்றுவரை சதாம் உசேன்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய ஹீரோ” என்று காய்ச்சி எடுத்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரை சீனாவின் கைக்கூலிகள் என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. இந்த சூழலில், இச்சம்பவத்தின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சீனா மட்டுமல்ல பாகிஸ்தானும் பங்காளி நாடுதான் என்பதுதான் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.