ராகுல் யாத்திரையில் வீரசாவர்க்கர்!

ராகுல் யாத்திரையில் வீரசாவர்க்கர்!

Share it if you like it

கேரளாவில் ராகுல் யாத்திரையை ஒட்டி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் வீரசாவர்க்கர் படம் இருந்தது பெரும் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்கிற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி இருக்கிறார். கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த யாத்திரை தற்போது கேரளா மாநிலத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டார். இதையொட்டி, ராகுலை வரவேற்கும் விதமாக, நெடும்பாசேரி கோட்டாயி ஜங்ஷனில் 80 அடி நீளத்தில் ஃபிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இந்த ஃபிளக்ஸில் ரவீந்திரநாத் தாகூர், சந்திரசேகர ஆசாத், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தது. இதில்தான் சாவர்க்கரின் படமும் இருந்ததுதான் வேடிக்கை. இதுதான் எதிர்க்கட்சிகள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

அதாவது, நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களில் வீரசாவர்க்கர் முக்கியமானவர். ஆகவே, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. போன்ற ஹிந்து அமைப்புகள் வீரசாவர்க்கரை புகழ்ந்து வருகின்றனர். இந்திய விடுதலைக்காக போராடிய தேசத் தலைவர் என்றும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளோ, தனது விடுதலைக்காக வெள்ளையர்களிடம் வீரசாவர்க்கர் மன்னிப்புக் கேட்டவர் என்று சொல்லி, அவமரியாதை செய்து வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியினர்தான் வீரசாவர்க்கரை இகழ்ந்து பேசி வருகின்றனர். அப்படி இருக்க, ராகுல் காந்தியின் யாத்திரையில் வீரசாவர்க்கரின் படம் இருந்தது விமர்சனத்துக்கும், கேலி, கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறது. இதுவரை பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள்தான் வீரசாவர்க்கரை தலைவராக ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றன. அதேபோல, காங்கிரஸ் கட்சியினரும் வீரசாவர்க்கரை தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டார்களோ என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால், காங்கிரஸ் எம்.எல்.ஏ. அன்வர் சதாத்தின் வீடு இதே கோட்டாயி ஜங்ஷன் பகுதியில்தான் அமைந்திருக்கிறது என்பதுதான். எனினும், ஃபிளக்ஸில் வீரசாவர்க்கர் படம் இருக்கும் தகவல் தெரியவந்ததும், காங்கிரஸ் கட்சியினர் வீரசாவர்க்கர் படத்தின் மீது மகாத்மா காந்தி படத்தை ஒட்டி, விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனிடையே, வீரசாவர்க்கர் போட்டோ வைத்ததாக காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி. செங்கமனாடு மண்டலத் தலைவர் சுரேஷ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சுரேஷ் கூறுகையில், “நேற்று முன்தினம் இரவு 10 மணிக்குத்தான் ஃபிளெக்ஸ் போர்டு வைக்கச் சொன்னார்கள். இதனால், 80 அடி நீள ஃபிளெக்ஸ் போர்டின் ஃபுரூப் சரியாக பார்க்க முடியவில்லை. நள்ளிரவு 1 மணிக்கு ஃபிளெக்ஸ் கிடைத்ததும், வைத்துவிட்டோம். அன்வர் சதாத் எம்.எல்.ஏ. அழைத்துச் சொன்னபோதுதான் சாவர்க்கர் போட்டோ இருந்தது தெரியவந்தது. ஒரு நிமிட கவனமின்மை ராகுல் யாத்திரையை விவாதமாக்கி விட்டது. இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நான் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக கட்சி என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்” என்றார்.


Share it if you like it