மாநகராட்சியில் 17 ஃபைல்கள் மாயம்: இது கம்யூனிஸ்ட் மாடல்!

மாநகராட்சியில் 17 ஃபைல்கள் மாயம்: இது கம்யூனிஸ்ட் மாடல்!

Share it if you like it

மாநகராட்சியில் 17 ஃபைல்கள் மாயமான விவகாரத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் பெண் மேயருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன். நாட்டின் இளவயது மேயர் என்கிற புகழை பெற்றவர். 2020 டிசம்பர் 28-ம் தேதி திருவனந்தபுரம் மேயராக பதவியேற்றுக் கொண்டார். இந்த சூழலில், மாநகராட்சியில் தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்காக, அக்கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் ஆனாவூர் நாகப்பனிடம் பட்டியல் கேட்டு கடிதம் அனுப்பியதாக மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பணிகள் அனைத்தையும் ஆளும் சி.பி.எம். கட்சியினருக்கு மட்டுமே வழங்குவதாகவும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதோடு, ஆர்யா ராஜேந்திரன் பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில்தான், மாநகராட்சியில் 17 ஃபைல்களை காணவில்லை என்கிற குற்றச்சாட்டு றெக்கை கட்டி இருக்கிறது. அதாவது, மேயராக ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்ற கடந்த 2 ஆண்டுகளில் திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகங்களிலிருந்து 17 ஃபைல்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்திருக்கிறது. முதலில் திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து மிகவும் முக்கியமான 3 ஃபைல்களை காணவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து மியூசியம் போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் 7 முக்கிய துறை சார்ந்த அலுவலகங்களிலும், 25 அரசு அலுவலகங்களிலும், 11 சோனல் அலுவலகங்களிலும் ஃபைல்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

அந்த வகையில், 2021 ஜனவரி முதல் கடந்த நவம்பர் 30-ம் தேதி வரையுள்ள ஃபைல்களை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். அப்போதுதான், மாநகராட்சி மெயின் அலுவலகத்திலிருந்து 9 ஃபைல்கள், ஸ்ரீகாரியத்திலுள்ள சோனல் அலுவலகத்திலிருந்து 5 ஃபைல்கள் உட்பட மொத்தம் 17 பைல்கள் காணாமல் போயிருப்பதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. ஏற்கெனவே பணி நியமன விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடும் எதிர்க்கட்சிகள், தற்போது ஃபைல்கள் காணாமல்போன பிரச்னைக்கும் சேர்த்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. ஏற்கெனவே பணி நியமன விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் சட்டமன்றத்தில் கிளப்பி நிலையில், தற்போது மாநகராட்சி ஃபைல்கள் மாயமான விவகாரத்தையும் கிளப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன. இது இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரனுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it